சிறுபான்மையின மக்கள் நடத்தப்படும் விதம்

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்திறன் என்பன அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் விளைவாகக் கேள்விக்கு உள்ளாகியிருப்பதாகவும், மந்தகரமான நல்லிணக்க செயன்முறை மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் தொடர் பிரயோகம் என்பன சிறுபான்மையின மக்கள் நடத்தப்படும் விதம் தொடர்பான கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் மீளுறுதிப்படுத்தவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் பிரகாரம் நிறைவேற்றப்படவேண்டிய கடப்பாடுகள் மற்றும் பூர்த்திசெய்யப்படவேண்டிய நிபந்தனைகளில் கடந்த 2020 – 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் என்பவற்றை உள்ளடக்கிய விசேட அதிகாரிகளின் கூட்டு அறிக்கை ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய பேரவை ஆகியவற்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

27 பக்கங்களைக் கொண்டிருக்கும் இவ்வறிக்கையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் உள்ளடங்கலாக சர்வதேச தரநியமங்களுக்கு அமைவாகக் கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் மற்றும் சட்டமூலங்கள், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நிலைவரம், மரணதண்டனை நிறைவேற்றுதல் மீதான இடைநிறுத்தம், சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை முடிவுக்குக்கொண்டுவரல், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மற்றும் ஊழலுக்கு எதிரான செயற்திட்ட அறிமுகம், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்ற நிலைவரம், சிறந்த ஆட்சி நிர்வாகம், பல்தரப்பு கட்டமைப்புக்களுடனான ஒத்துழைப்பு, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கலுடன் தொடர்புடைய நிபந்தனைகளின் அமுலாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயப்பரப்புக்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டிருப்பதுடன் அவைபற்றிய முடிவுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு தலைப்புக்களின்கீழ் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கை தொடர்பான மதிப்பீடு இடம்பெற்ற 2020 – 2022 வரையான காலப்பகுதியில் பல்வேறு முக்கிய விடயங்கள் அவதானிக்கப்பட்டிருப்பதுடன், இவ்வறிக்கை இலங்கையில் நிலவிய சிக்கலான நிலைவரத்தைப் பிரதிபலிக்கின்றது. குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கை விலகியது. அதேபோன்று மிகமோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவாக எழுச்சியடைந்த போராட்டங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் என்பன 2022 ஆம் ஆண்டில் அமைதியான முறையில் ஜனாதிபதி மாற்றமொன்று இடம்பெறுவதற்கு வழிகோலின.

அதன்படி பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்கனவே நலிவுற்ற நிலையிலுள்ள மக்கள் மீதும், தொழிலாளர் உரிமைகள் மீதும், சூழலியல் தராதரங்கள் மீதும் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கு அவசியமான முயற்சிகளை இலங்கை மேற்கொண்டுவருவதுடன், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், ஊழலை இல்லாதொழிப்பதற்குமான கடப்பாட்டை புதிய அரசாங்கம் கொண்டிருக்கின்றது. அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச தரநியமங்களுக்கு அமைவாக மாற்றியமைப்பதற்கும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அவசியமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை அடைந்துகொள்வதிலுள்ள சவால்கள் தொடர்கின்றன.

மனித உரிமைகள்

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொண்டதிலிருந்து மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்தது. இருப்பினும் அதன்மீதான சவால்கள் தொடர்வதுடன், 2020 – 2022 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மறுசீரமைப்புக்களில் பின்னடைவுகள் அவதானிக்கப்பட்டன.

அதேபோன்று கடந்த ஆண்டு ஏற்பட்ட தீவிர பொருளாதார நெருக்கடி ஒருபுறம் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களைத் தோற்றுவித்திருந்தாலும், மறுபுறம் நலிவுற்ற நிலையிலுள்ள சமூகப்பிரிவினர் உள்ளடங்கலாக பெருந்தொகை மக்கள்மீது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி, சமூக – பொருளாதார உரிமைகள் தொடர்பான தீவிர கரிசனைகளையும் தோற்றுவித்தன. கடந்த ஆண்டு ஜுலை மாதத்துக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல், பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி தொடர்ந்த வேளையில், மிகமோசமான அடக்குமுறை உத்திகள் கையாளப்பட்டமை நன்கு வெளிப்பட்டது.

குறிப்பாக 2022 ஜுலை 18 அன்று அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து போராட்ட இயக்கத்தின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டமை இக்கரிசனையைத் தீவிரப்படுத்தியது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கலைப் பொறுத்தமட்டில் ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது மிகமுக்கிய அம்சமாகக் காணப்படுகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராகப் படையினர் பயன்படுத்தப்பட்டமையானது அரசினால் அடக்குமுறைகள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடும் என்ற அச்சத்தைத் தோற்றுவிக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒடுக்குமுறைகளுக்கு உட்படாதவண்ணம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை என்பவற்றை இலங்கை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும். அதேபோன்று அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படக்கூடிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சிவில் சமூகப்பிரிவினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் உள்வாங்கப்படுவதன் மூலமே அது நிலைபேறானதொரு செயன்முறையாக அமையும்.

பயங்கரவாதத்தடைச்சட்டம்

அடுத்ததாக நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள மற்றும் புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய அனைத்து சட்டங்களும் சர்வதேச தரநியமங்களின் பிரகாரம் அமையவேண்டும். அதன்படி 1979 ஆம் ஆண்டு முதல் சந்தேகநபர்களைத் தன்னிச்சையாகக் கைதுசெய்து, விசாரணைகளின்றி நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுவரும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பது ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பான நிபந்தனைகளில் பிரதானமானதாகும்.

கடந்த 2022 மார்ச் மாதம் அச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், இன்னமும் அது சர்வதேச தராதரங்களுக்கு முரணான சட்டமாகவே காணப்படுகின்றது. அதன் நீட்சியாக இவ்வாண்டு மார்ச் 22 ஆம் திகதி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் சில சரத்துக்களில் முன்னேற்றகரமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைவாக நிலவும் கரிசனைகள் இன்னமும் தொடர்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி மீண்டும் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் குறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகள், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தீவிர கரிசனைகளை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், இவ்விடயத்தில் அவர்களது கரிசனைகள் கருத்திற்கொள்ளப்படவேண்டியது இன்றியமையாததாகும்.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம்

போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் அரசியலமைப்புக்களான 19 ஆவது திருத்தத்தின்கீழ் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகிய முக்கிய கட்டமைப்புக்கள் நிறுவப்பட்டன. இருப்பினும் சுயாதீனக்கட்டமைப்புக்களின் தலைவர்களை நியமிப்பதற்கான மட்டுமீறிய அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் 2020 இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தைத் தொடர்ந்து அக்கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்திறன் என்பன கேள்விக்குள்ளாகின.

சிறந்த ஆட்சி நிர்வாகம்

இலங்கையில் பல்வேறு ஊழல் எதிர்ப்புக் கட்டமைப்புக்கள் இயங்கிவந்தாலும், தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு தொடர்பான கரிசனைகள் இன்னமும் தொடர்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இக்காலப்பகுதியில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரமானது நேர்மறையானதும், எதிர்மறையானதுமான துலங்களைக் காண்பித்துள்ளது. குறிப்பாக மந்தகரமான நல்லிணக்க செயன்முறை மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் தொடர் பிரயோகம் என்பன சிறுபான்மையின மக்கள் நடத்தப்படும் விதம் தொடர்பான கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாட்டை இலங்கை மீளுறுதிப்படுத்தவேண்டும்.

வெறுப்புணர்வுசார் குற்றங்களைக் கையாள்தல், பொலிஸ் தடுப்புக்காவலின்கீழ் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், பால்புதுமையின சமூகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவரல், ஆண் – பெண் சமத்துவமின்மையை முடிவுக்குக்கொண்டுவரல், சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பன பற்றிய கரிசனைகள் தொடர்ந்து நிலவுகின்றன என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts