முதுகெலும்பாக அமைந்துள்ள சுற்றுலாத்துறை

எமது நாடு பொருளாதாரத்துறையில் முன்னேற்றம் கண்டு பிரகாசிப்பதற்கு சுற்றுலாத்துறை பிரதான காரணமாக அமைந்துள்ளதுடன், யுத்தம் மற்றும் கொரோனா தாக்கத்தின் பின்னர் தற்போது எமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில், இந்த வருடத்தின் ஒக்டோபர் 15ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்து 66 ஆயிரத்து 661 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், அவர்களில் அதிகளவில் இந்தியர்களே வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது. இந்தியர்களுக்கு அடுத்தபடியாக ரஷ்யா, பிரிட்டன், சீனா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பெருமளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாகவும், அச்சபை மேலும் சுட்டிக்காட்டியது.

இந்நிலையில், எமது நாட்டில் சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறச் செய்வதற்கான நடவடிக்கையை முன்வைத்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை வழங்கும் முன்னோடித் திட்டமொன்றை முன்வைத்துள்ளார்.

இந்தியா, ரஷ்யா, சீனா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வீஸா இன்றி இலங்கைக்கு வருகை தருவதற்காக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ முன்வைத்துள்ள இந்த முன்னோடித் திட்டம், நவம்பர் 6ஆம் திகதி முதல் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிவரை அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழில் கொஞ்சும் இயற்கைச் சூழல், பசுமையான நிலப்பரப்பு, அழகிய கடற்கரைகள், திருகோணமலையில் இயற்கைத் துறைமுகம், பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்கள், தலதாமாளிகை, சிகிரியா உள்ளிட்ட புகழ்பெற்ற இடங்கள் ஆகியவற்றுடன் சிறந்த சுவாத்தியம், சிறந்த காலநிலை மற்றும் வளமான கலாசாரப் பாரம்பரியத்தையும் கொண்டமைந்துள்ள எமது நாடு, சுற்றுலாப் பயணிகளை மிக நீண்டகாலமாகவே கவர்ந்த வண்ணமுள்ளது.

இயற்கையாகவே எமது நாட்டில் காணப்படும் இந்த சிறப்பம்சங்கள் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் காண்பதற்கு படிக்கல்லாகவும் அமைந்துள்ளன. ஆகையினால், இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கும் அதனால் ஏற்படும் பொருளாதார அபிவிருத்திக்கும் இடையிலுள்ள ஆழமான மற்றும் பிரிக்க முடியாத தொடர்புகள் தொடர்பாக விரிவாக ஆராய்வது அவசியம். இது தொடர்பாக தினகரனுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள்துறை, மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பொருளியல் பிரிவுக்கான உதவி விரிவுரையாளர் ஸ்ரீதரன் வினோஜா கருத்துத் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உள்ள மிக முக்கியமான தொடர்பு அந்நிய செலாவணி வருமானத்தில் தங்கியுள்ளதுடன், இந்த வருமானம் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு உயிர்நாடியாக அமைந்துள்ளது. அத்துடன், நாணயமாற்று விகிதமுறை நிலையான தன்மையை பேணுவதுடன் இது கொடுக்கல், வாங்கலில் சமநிலையையும் வலுப்படுத்துகின்றது. இவ்வாறான நிதி ஸ்திரத்தன்மையே பரந்தளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றது.

வேலைவாய்ப்பு பெருகுதல்:

சுற்றுலாத்துறை வளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பல்வேறு களங்களில் பல்வேறு நபர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்கின்றனர். விருந்தோம்பல், போக்குவரத்து, சில்லறை வணிகம், உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்புகள் உருவாகுவதுடன், இந்த வேலைவாய்ப்புகள் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களிலும் விரிவடையத் தொடங்கியுள்ளன. இதனால் பல்வேறு திறன்களைக் கொண்ட மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாக சுற்றுலாத்துறை அமைவதுடன், வேலைவாய்ப்பற்ற நெருக்குவாரத்தையும் கட்டுப்படுத்துகின்றது. இந்நிலையில், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைவதனால், சுற்றுலாத்துறையானது அடிமட்டத்திலிருந்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது.

தொழில்முனைவோரை ஊக்குவித்தல்:

தொழில்முனைவோரை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பதுடன், புதிய தொழில்முனைவோரையும் சுற்றுலாத்துறை உருவாக்குகின்றது. எமது பாரம்பரிய உணவகங்கள், உள்ளுர் கைத்தொழில் உற்பத்திக் கடைகள், சுற்றுலா உதவி நிறுவனங்கள் சுற்றுலாத்துறைக்கு ஏதுவாக அமைவதுடன், புதிய சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சமையல் கலை நிபுணர்களும் தோற்றம் பெறுகின்றனர். தொழில்முனைவோரால் வருமானம் கிடைப்பதுடன், புதிய கண்டுபிடிப்புகளையும் தொழில்முனைவோர் மேற்கொள்கின்றனர். இதனால், அத்தியாவசிய பொருளாதார வளர்ச்சி தானாகவே ஏற்படுகின்றது.

உட்கட்டமைப்பு மேம்பாடு:

தொடர்ச்சியான சுற்றுலாத்துறை வளர்ச்சியினால் உட்கட்டமைப்பில் கணிசமானளவு முன்னேற்றம் ஏற்படுமென்பதும் திண்ணமாகும். ரயில்வே மற்றும் பஸ் போக்குவரத்து அபிவிருத்தி, விமான நிலைய விரிவாக்கம், புதிய சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவகங்கள் உருவாக்கம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாடுகள் எட்டப்படுகின்றன.

ஒவ்வொரு சுற்றுலாப் பயணியின் செலவீனமும் பாரிய இலாபத்தை தருகின்றது. உதாரணமாக சுற்றுலாப் பயணி விடுதியில் தங்குவது, உணவு, போக்குவரத்து, வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு உள்ளிட்டவற்றின் மூலம் இலாபம் கிடைக்கின்றது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தியினால் எமது அரசாங்கம் கணிசமானளவு நன்மை பெறுவதாகவே கூற வேண்டும். ஏனெனில், சுற்றுலாத் தளங்களுக்கான நுழைவுக்கட்டணம் அறவிடப்படுவதினால், வருமானம் கிடைப்பதுடன், இவ்வாறு கிடைக்கும் வருமானமானது எமது நாட்டின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக முதலீடு செய்யப்படுகின்றது.

எமது பாரம்பரியமான கலாசாரத்தையும் எமது நாட்டு மரபுகளையும் பேணிப் பாதுகாப்பதற்கும் சுற்றுலாத்துறை அடித்தளம் இடுகின்றது. உள்ளுர் கலாசாரம் மற்றும் மரபுகளை சுற்றுலாப் பயணிகள் கடைப்பிடிக்கும் போது எமது நாட்டுக்கே உரித்தான தனித்துவமான அம்சங்களை பராமரிக்கவும் அவற்றை வெளி உலகுக்கு கொண்டுசெல்லவும் உதவுகின்றது. இதனால் எமது நாட்டின் அடையாளத்தை வளப்படுத்துவது மாத்திரமின்றி, அதிகூடிய அனுபவங்களை பெற்றுக்கொள்ள ஆர்வமுடையோரையும் கவர்கின்றது.

எல்லை கடந்த பொருளாதார வளர்ச்சி:

சுற்றுலாத்துறையினால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி எமது நாட்டுக்கு மாத்திரமின்றி, பிராந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதுடன், ஏழ்மையையும் கட்டுப்படுத்துகின்றது. எமது நாட்டு உற்பத்திகளையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வழிகோலுகின்றது. சுற்றுலாத்துறை அபிவிருத்தி உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுடன், புதிய நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள், போக்குவரத்து முகவரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யவும் தூண்டுகின்றன.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. தூய்மையான சூழல், தூய்மையான காற்று, சிறந்த சுகாதாரப் பழக்கவழக்கம் உள்ளிட்டவைகளும் சுற்றுலாத்துறைக்கு அவசியமாவதாகவும் ஸ்ரீதரன் வினோஜா விளக்கினார்.

மேற்கூறப்பட்ட விடயங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவெனில், இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பாரிய தொடர்பு உள்ளமை தெட்டத்தெளிவாகின்றது. ஆகையினால், சுற்றுலாத்துறை எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் முதுகெலும்பாகவே உள்ளதுடன் நாட்டின் வளமான, பிரகாசமான எதிர்காலத்துக்கும் வழியமைக்கின்றது. இந்நிலையில் எமது நாட்டில் சுற்றுலாத்துறையை மேன்மேலும் அபிவிருத்தி செய்து, பொருளாதார அபிவிருத்தியில் புதிய அத்தியாயத்தை நோக்கிப் பயணிப்பதற்கான அரசாங்கத்தின் விருப்பத்துக்கு புத்திஜீவிகள், இளைஞர், யுவதிகள், கைத்தொழிலாளர்கள் உட்பட ஒவ்வொரு குடிமகனும் தம்மாலான பங்களிப்பை வழங்கி, நாட்டில் சுபீட்சத்தை கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.

ஆர்.சுகந்தினி

Related posts