தீபாவளி ரிலீஸ் வசூலில் முந்துவது எது?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி கார்த்தியின் ‘ஜப்பான்’ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்கள் வெளியாகின. இதன் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து பார்ப்போம்.

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25-ஆவது படமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ஜப்பான்’ முதல் நாளில் ரூ.4.15 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.3 கோடி என கூறப்படுகிறது.

விளம்பரம், புரமோஷன் மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக முதல் நாளில் கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படம் வசூலில் முன்னேறியிருந்தது. அதன் பின்னர் இரண்டு படங்களின் விமர்சனங்களும் வெளியான நிலையில், இரண்டாவது நாள் ‘ஜப்பான்’ ரூ.3.10 கோடியுடன் பின்தங்க, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரூ.5.21 கோடியுடன் கூடுதல் வசூலை எட்டியது.

தீபாவளி நாளான ஞாயிற்றுக் கிழமை ‘ஜப்பான்’ ரூ.4 கோடியையும், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரூ.7 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 நாட்களின் அடிப்படையில் ‘ஜப்பான்’ ரூ.10 கோடிக்கும் அதிகமான வசூலையும், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரூ.15 கோடிக்கும் அதிகமான வசூலையும் ஈட்டியுள்ளது. கலவையான விமர்சனங்களால் ‘ஜப்பான்’ வசூலில் பின்தங்கியிருக்கிறது. இரண்டு படங்களும் ரூ.30-40 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தவிர, இந்த இரண்டு நட்சத்திர படங்கள் ஒருபுறம் இருக்க, விமர்சன ரீதியாக வரும் வரவேற்பை கண்டு ‘கிடா’ படத்தை பார்க்க செல்லும் பார்வையாளர்களுக்கு போதுமான டிக்கெட்டுகள் விற்கவில்லை என கூறி காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக படத்தின் இயக்குநர் வேதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts