முழு போர் நிறுத்தம் கோராத ஜி7 நாடுகள்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 33-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு நாடுகள் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்பதை எங்கும் வலியுறுத்தவில்லை. அதேநேரம், நேற்றிரவு காசா பகுதி முழுவதும் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல், காசாவின் முக்கிய மருத்துவமனைகளான அல்-ஷிஃபா மற்றும் இந்தோனேசியன் மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசி தாக்கின என்று ஹமாஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளனர். கான் யூனிஸ், நுசிராத் மற்றும் ஜபாலியா அகதிகள் முகாம்களும் இஸ்ரேலின் இந்த குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தப்பவில்லை என தனது அறிக்கையில் ஹமாஸின் உள்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக தெரிவிக்கையில், “குடியிருப்புகளும் தாக்குதலில் சிக்கியதால் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், ரமல்லாவில் உள்ள பிர்செயிட் (Birzeit) பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிவளைத்த இஸ்ரேல் ராணுவத்தினர், பல்கலைக்கழக சொத்துக்களை சேதப்படுத்தியதுடன், 45-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை கைது செய்துள்ளனர்” என்று ஹமாஸ் தலைமையிலான உள்துறை தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு ஹமாஸ் தலைவர் கொலை: ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மொஹ்சென் அபு ஜினாவைக் கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. மொஹ்சென், ஹமாஸின் உளவுத்துறை மற்றும் ஆயுதப் பிரிவின் தலைவராக செயல்பட்டதுடன், இஸ்ரேல் போருக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தயாரித்த குழுவிலும் இருந்துள்ளார். அவரை இன்று காலை கொலை செய்ததாக, இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசா நகரின் மையப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம்: இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் யோவ் கேலன்ட் செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர், “தரைவழியாக ஊடுருவியுள்ள இஸ்ரேல் ராணுவ படைகள் காசா நகரின் மையப்பகுதியை அடைந்துள்ளது. அங்கு, ஹமாஸ்களை சுற்றி வளைத்து ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் குழு ஏற்படுத்தி வைத்திருக்கும் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தற்போது தாக்கத் தொடங்கியுள்ளோம். சுமார் நூறு கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் சுரங்கப்பாதைகளை தகர்ப்பதற்காக இஸ்ரேஸ் ராணுவ பொறியாளர்கள் வெடிமருந்துக்களை பயன்படுத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் கோராத ஜி7 கூட்டமைப்பு: டோக்கியோவில் நடந்துவரும் ஜி7 கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நாடுகள், இஸ்ரேல்-காசா போரில் இஸ்ரேலை ஆதரித்துள்ளனர். ‘ஹமாஸை அடக்கும்விதமாக இஸ்ரேல் தற்காப்பு நடவடிக்கையாக போரை மேற்கொண்டுள்ளதாக’ கூறி இஸ்ரேலுக்கு ஜி7 கூட்டமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்த அதேவேளையில், காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும்வகையில் ‘தற்காலிக போர் நிறுத்தம்’ தேவை என்பதை வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தற்காலிக போர் நிறுத்தம் வேண்டும் என்பதை டோக்கியோ கூட்டம் வாயிலாக இஸ்ரேலிடம் வலியுறுத்தினர். தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு நாடுகள் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்பதை எங்கும் வலியுறுத்தவில்லை.

இஸ்ரேல் காசாவை மீண்டும் ஆக்கிரமிக்கக் கூடாது: ஜி7 கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், “எதிர்காலத்தில் காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றக்கூடாது. போர் முடிவுற்ற பிறகு காசாவை மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது. காசாவில் போருக்குப் பின்பும் அமையும் ஆட்சியில் பாலஸ்தீனர்களின் விருப்பங்களுக்கும், குரல்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பாலஸ்தீன அதிகாரத்தின்கீழ் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கடற்கரை பகுதிகளும் போருக்குப் பின் காசா உடன் இணையும் நோக்கில் செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

பலி எண்ணிக்கை: கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. 33-வது நாளை எட்டியுள்ள ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் இதுவரை 10,328 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 4000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். மேலும் 25,956 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் 1,405 பேர் பலியாகியுள்ளனர். 5600 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹமாஸ் – இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்துவரும் நிலையில், பிணைக்கைதிகளை விடுவிக்கப்படும் வரை காசாவுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார். 242 பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். ஆனால், இன்னும் போருக்கு சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை. உலகத் தலைவர்கள் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதனை மறுத்து வருகிறார். இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த காசாவையும் சுற்றிவளைத்து விட்டதாகவும் வடக்கு, தெற்கென்றில்லாமல் காசாவை இரண்டாகப் பிரித்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

Related posts