இலங்கை ஓவியர்களின் முதலாவது ஓவியக் கண்காட்சி

கட்புல மற்றும் ஆற்றுகைக் கலைகள் பல்கலைக் கழகத்தின் JDA பெரேரா கலா பவனத்தில் இந்தியாவில் பயின்றவர்களின் ஆக்கங்களை காட்சிப்படுத்தும் வகையில் “சித்ரலேகா” என்ற தலைப்பிலான முதலாவது ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (10) முதல் நாளை மறுதினம் (12) வரை இடம்பெறும் இக்கண்காட்சியை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஒழுங்கு செய்துள்ளது.

கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையினால் அனுஸ்டிக்கப்படும் இந்தியாவில் பயின்ற மாணவர்கள் ஆண்டைக் கொண்டாடும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. இந்தியா இலங்கை இடையிலான 75 வருட இராஜதந்திர உறவு மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் (இந்திய கலாசார நிலையம்) ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளமை ஆகிய வரலாற்று முக்கியத்துவமிக்க தருணங்களையும் இந்த தனித்துவமிக்க ஓவியக் கண்காட்சி குறித்து நிற்கின்றது.

இந்தியாவில் சித்திரக்கலையினை பயின்ற தலைசிறந்த இலங்கையின் ஓவியக் கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படும் இந்தக்கண்காட்சி தேசிய கலா பவனத்துடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் இந்தியாவில் ஓவியம் பயின்ற இலங்கையர்களின் நூற்றுக்கணக்கான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. தலைசிறந்த ஓவியர்களான ஆனந்த சமரக்கோன், சோமபந்து வித்யாபதி, சங்கைக்குரிய எல்.டி.பி.மஞ்சுசிறி தேர்ர், ஜோர்ஜ் கேய்ற், ஹரி பீரிஸ் மற்றும் உபசேன குணவர்த்தன உள்ளிட்ட பலரது ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலைகளின் உலகளாவிய ஈர்ப்பு, எல்லைகளைத் தாண்டியதாகவும் உள்ள நிலையில் இந்த கண்காட்சியானது இரு நாடுகளுக்கிடையேயான நிலைபேறானநட்பு மற்றும் ஒத்துழைப்பிற்கு ஒரு சான்றாகவும் உள்ளது. கடந்த ஐந்து தசாப்தங்களில் சாந்திநிகேதனின் விஸ்வபாரதி, பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், கொல்கத்தாவின் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் போன்ற இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல்வேறு புலமைப்பரிசில் திட்டங்களில் சமகால இலங்கை கலைஞர்கள் 25 பேர் கற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts