கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நூற்றாண்டு விழா

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நிறுவப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைந்ததனை குறிக்கும் வகையில் கல்லூரித்தின விழா இன்று (01) கலாசாலையில் இடம்பெற்றது.

கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக கலாசாலையின் முன்னாள் அதிபர்களான வே.கா.கணபதிப்பிள்ளை, வீ.கருணலிங்கமும் கௌரவ விருந்தினராக நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய முதல்வர் சாந்தனி வாகீசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து நூறு ஆண்டுகளை வெளிப்படுத்தும் வகையில் 100 நிறைகுடங்கள், கொடிகள் ஆலவட்டத்துடன் பண்பாட்டு பேரணி இடம்பெற்றது.

தொடர்ந்து ரதிலக்‌ஷ்மி மண்டபத்தில் நூற்றாண்டு விழா ஆரம்பமானது. நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கேக் வெட்டப்பட்பட்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

அதனை தொடர்ந்து விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கலாசாலையினால் வெளியிடப்படும் நூலான காலாதீபம் நூலும் வெளியிடப்பட்டது. நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்வாக கலாசாலையின் ஓய்வுநிலை பிரதி அதிபரான பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு எழுதிய கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பற்றிய சிறப்பு ஆய்வான “வடக்கின் ஆசிரியர் கலாசாலை” எனும் நூலும் வெளியிடப்பட்டது.

இந்நூலுக்கான கருத்துரையினை கலாசாலையின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கௌரவ ஆலோசகருமான சரா.புவனேஸ்வரன் நிகழ்த்தினார். கலாசாலை கீதத்துடன் விழா நிறைவுபெற்றது.

Related posts