‘பேர்லின் குளோபல்’ மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஜேர்மனி பயணம்

தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கான உயர்மட்ட முனனெடுப்பான “பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இம் மாநாடு பல நாட்டுத் தலைவர்களின் பங்கேற்புடன் செப்டெம்பர் 28 – 29 ஆம் திகதிகளில் ஜேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாநாட்டில் முதல் நாளன்று அரச தலைவர்கள கலந்துரையாடலில் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார்.

இம்மாநாட்டில், ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), பெல்ஜிய பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ (Alexander de Croo), கசகஸ்தான் ஜனாதிபதி கெசெம் – ஜோமார்ட் டோகயெவ் (Kassym-Jomart Tokayev), ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Kassym-Jomart Tokayev) உள்ளிட்டவர்களுடன் பல நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள பொருளாதார கொள்கை மற்றும் நிதிமயமாக்கல் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். அதேபோல் இந்த கலந்துரையாடலில் உலகின் முக்கிய நிறுவனங்கள் பலவற்றின் நிறைவேற்று அதிகாரிகளும் பங்குபற்றவுள்ளனர்.

கிழக்கு ஜேர்மனிய அரச கவுன்ஸில் மற்றும் ஐக்கிய ஜேர்மனியின் பெடரல் சான்ஸலரின் வாசஸ்தளமான வராலாற்றுச் சிறப்பு மிக்க ஐரோப்பிய முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப கல்லூரி (ESMT) மண்டபத்தில் இம் மாநாடு நடத்தப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

ஜேர்மனுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜேர்மன் சான்ஸ்லர் ஒலாப் ஸ்கொல்ஸ் (Olaf Scholz), ஜேர்மனியின் பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜேர்மன் வணிக மற்றும் தொழில் சபையின் (DHIK) உறுப்பினர்களையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் நிறைவில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜேர்மன் சான்ஸலரின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கை தொடர்பிலான ஆலோசகர் ஜென்ஸ் பிளொண்டரை (Jens Plötner) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதனையடுத்து வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஜேர்மன் வெளிவிவகார அலுவலகத்தின் இராஜாங்க செயலாளர் தோமஸ் பேகர் (Dr. Thomas Bagger) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.

பின்னர் பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதி அமைச்சின் ஆலோசகர் பொருளாதார நிபுணர் தெஷால் டி மெல் உள்ளிட்டவர்களும் ஜேர்மனிக்கான இலங்கை தூதுவர் வருணி முத்துகுமாரனவும் இந்த சந்திப்புக்களில் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts