இலங்கைக்கு வருகைதரவுள்ளார் சமந்தா பவர்

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) தலைமை அதிகாரி சமந்தா பவர் வெகுவிரைவில் இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

அமெரிக்க இராஜதந்திரியான சமந்த பவர், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்னர் 2013 – 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் 28 ஆவது தூதுவராகக் கடமையாற்றினார்.

அமெரிக்காவின் ஆளுமை மிக்க இராஜதந்திரிகளில் ஒருவராக நோக்கப்படுபவரும், கடந்த 2016 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழால் வெளியிடப்பட்ட உலகின் பலம்பொருந்திய பெண்களின் பட்டியலில் 41 ஆம் இடத்தில் இருந்தவருமான சமந்த பவர், கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கை கடந்த ஆண்டு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், நாட்டின் விவசாயிகள் மற்றும் வறிய, பின்தங்கிய சமூகப்பிரிவினருக்கு அவசியமான பல்வேறு உதவிகள் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பினால் வழங்கப்பட்டன.

அதன் ஓரங்கமாக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்திருந்த சமந்தா பவர், உரத்தையும் விவசாய நடவடிக்கைகளுக்கு அவசியமான ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகளுக்கு உதவும் வகையில் 40 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் அறிவித்திருந்தார்.

அதுமாத்திரமன்றி அங்கு கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் கண்காணிப்புப்பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு நீண்டகாலம் கடந்திருக்கின்ற போதிலும், கடந்த காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகள் இன்னமும் போதியளவில் பூர்த்திசெய்யப்படவில்லை. நீதியைப் பெற்றுக்கொள்வதும் காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதுமே பாதிக்கப்பட்ட தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இன்னமும் தாய்மார் காணாமல்போன தமது பிள்ளையின் புகைப்படத்துடன் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளில் அமெரிக்கா ஓர் துடிப்பான உறுபபினராக விளங்குவதுடன் மேற்படி கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றது’ என்றும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே அவர் மீண்டும் வெகுவிரைவில் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். அவருடன் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் உதவி நிர்வாக அதிகாரி அஞ்சலி கௌரும் வருகைதருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts