நாளை இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இலங்கைக்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சனிக்கிழமை (2) நாட்டை வந்தடைவார்.

இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து ஆராய்வதே அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்துக்கான நோக்கம் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (3) வரை தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதுடன், இதன்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயவுள்ளார்.

அதுமாத்திரமன்றி, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையுடன் தற்போது நிலவும் நட்புறவை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் குறித்து மீளுறுதிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகராலயம், பாதுகாப்புத்துறை சார்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் வலுவான நட்புறவை மேலும் ஆழப்படுத்திக்கொள்வதில் இவ்விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சீனாவின் ‘ஷி யான் 6’ என்ற ஆய்வுக்கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியதையடுத்து மூண்ட சர்ச்சைகளின் பின்னணியிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இவ்விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts