ரஜினிகாந்த் படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்..

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு கேரளாவில் அதிகளவிலான தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மலையாள ஜெயிலர் பட இயக்குனர் தர்ணா போராட்டம் நடத்தி உள்ளார்.

ஒரே நாளில் ஒரே பெயர் கொண்ட இரண்டு திரைப்படங்கள் வருகிற ஆகஸ்டு 10-ந் தேதி வெளியாக உள்ளது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படமும், அதே பெயரில் சக்கீர் மடதில் இயக்கியிருக்கும் மலையாள திரைப்படம் ஒன்றும் ரிலீஸ் ஆக உள்ளன.

இதுதான் தற்போது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சக்கீர் மடதில் இயக்கியுள்ள ஜெயிலர் திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தோடு ரஜினி நடித்த ஜெயிலர் படமும் அதே தலைப்பில் ரிலீஸ் ஆனால் தன்னுடைய படத்தின் வசூல் பாதிக்கும் எனக்கூறி, தமிழ் ஜெயிலர் படக்குழுவிடம் கேரளாவில் மட்டும் பெயரை மாற்றி ரிலீஸ் செய்யுமாறு மலையாள ஜெயிலர் படக்குழு கோரிக்கை வைத்தது.

ஆனால் அவர்களின் கோரிக்கையை தமிழ் ஜெயிலர் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த மலையாள இயக்குனர் சக்கீர் மடதில், என்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளின் நகையை விற்றும், வீட்டை அடமானம் வைத்தும் கடன் வாங்கியும் தான் இந்த படத்தை எடுத்துள்ளேன்.

இப்படத்தின் வெற்றியை நம்பி தான் என் எதிர்காலமே உள்ளது. ரஜினி நல்ல மனம் கொண்டவர்.

அவர் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த நிலையில், கேரளாவில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ள இரு ஜெயிலர் படங்களுக்கு தியேட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி தமிழ் ஜெயிலர் படத்திற்கு 400 தியேட்டர்களும், மலையாள ஜெயிலர் படத்திற்கு 40 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் கடுப்பான மலையாள ஜெயிலர் பட இயக்குனர் சக்கீர் மடதில், கேரள பிலிம் சேம்பர் அலுவலகம் முன், “மலையாள சினிமாவை காப்பாற்றுங்கள்” என்கிற பதாகைகளுடன் தர்ணா போராட்டம் நடத்தி உள்ளார்.

இதனால் பரபரப்பு நிலவியது. தமிழ் ஜெயிலர் படத்தில் மோகன்லால் சிறிய ரோலில் நடித்துள்ளதால் தான் இப்படத்திற்கு கேரளாவிலும் அதிகளவு மவுசு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts