இலங்கை தமிழர் விடயம்; தி.மு.க. இரட்டை வேடம்

இந்திரா காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் தவறுகளை சரி செய்ய பிரதமர் நரேந்திர மோடியால் மட்டும்தான் முடியுமென்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டமைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் நன்றி கூறுவதாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், கூட்டணி ஆட்சியின் போது இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல், தற்போது அக்கறை இருப்பது போன்று தி.மு.க. அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்தில் முழுமையாக, கடந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி ஆட்சியின் தவறுகளை வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது. இலங்கையில் யுத்தத்தின் மத்தியில் தமிழர்கள் இன்னல்களை எதிர்கொண்ட போது, இந்தியாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக புதுடில்லிக்கு பறந்தவர்கள், ஏதோ கடிதங்களை எழுதியே பிரச்சினைகளை தீர்த்து விட்டதைப் போன்று இன்று பெருமை அடித்துக்கொண்டிருப்பது நகைப்புக்கிடமான விடயம்.

தி.மு.க. ஆட்சியில் கச்சதீவு தாரை வார்க்கப்பட்ட போது, பா.ஜ.க. தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் அன்று ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசாங்கம், வழக்குக்கு தேவையான ஆவணங்களைக் கூட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், கச்சதீவு நம் கையை விட்டுச் செல்ல காரணமாக இருந்தது.

அதன் பின்னர், தி.மு.க. பலமுறை பல கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்த போதும், கச்சதீவை மீட்க உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது கச்சதீவு தொடர்பாக பேச தி.மு.க.வுக்கு என்ன தகுதி இருக்கின்றது? தி.மு.க.வை விட இலங்கைத் தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி.

இலங்கை தமிழ் பேசும் மக்களுக்காக 51,000 வீடுகள், தொழிற்கூடங்கள், வீதிகள், ரயில் போக்குவரத்து வசதிகள், கப்பல் சேவை, கலாசார மையம் என மக்கள் வாழ்வாதாரம் உயர்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான நலப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உரிமை வழங்கும் 13ஆம் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை வலியுறுத்தியிருக்கிறார். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்.

எப்போதும் இல்லாதளவுக்கு மீனவர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் மத்திய வெளியுறவுத்துறை துரிதமாக செயற்பட்டு, மீனவர்களுக்கு உடனடி சட்ட உதவிகளை வழங்கி அவர்களை மீட்டு வருகின்றது.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்த போது, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணாமல், தற்போது அக்கறை உள்ளது போன்று தி.மு.க. அரசாங்கம் இரட்டை வேடம் போடுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts