அரசியலில் ஈடுபட நடிகர் விஜய் நாளை ஆலோசனை

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.
பனையூரில் உள்ள அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அவரது அறிவுறுத்தலின்படி, அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினர். கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.
அண்மையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் பேசியிருந்தார் நடிகர் விஜய். அந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்குவது குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தநிலையில், 2025-ம் ஆண்டு முழுவதும் மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் கவனம் செலுத்த போவதில்லை எனவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026-ம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் காமராஜர் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related posts