திரை விமர்சனம்: தண்டட்டி

கிடாரிப்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் தங்க பொண்ணு (ரோகிணி), திடீரென காணாமல் போய்விடுகிறார். கண்டுபிடித்து தரச் சொல்கிறார்கள் அவர் மகள்கள். விவகார ஊரான அங்கு செல்ல, காவலர்கள் மறுத்துவிட, புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் ஹெட் கான்ஸ்டபிள் சுப்பிரமணி (பசுபதி) செல்கிறார். அவரைக் கண்டுபிடித்த நிலையில் திடீரென மரணமடைகிறார் தங்கபொண்ணு. சடலமாக வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரின் 4 மகள்களும் மகனும் அவர் காதில் மாட்டியிருக்கும் தண்டட்டியை (பாம்படம்) எப்படி கைப்பற்றலாம் என தனித்தனியாகத் திட்டம் போடுகின்றனர். இந்நிலையில் திடீரென மாயமாகிறது தண்டட்டி. அதைத் திருடியது யார்? ஹெட்கான்ஸ்டபிள் சுப்பிரமணி அதைக் கண்டுபிடித்தாரா? அந்தத் தண்டட்டி யாருக்குச் சொந்தமானது என்பதைக் கொஞ்சம் நகைச்சுவை, நிறைய சுவாரஸ்யம் மற்றும் திருப்பங்களோடு ரசனையாகச் சொல்கிறது படம்.
ஒரு தண்டட்டியின் வழியே கிராமத்து உறவுகளையும் சுயநல மனங்களையும் சமரசமற்ற யதார்த்தத்தோடு நகைச்சுவையாகச் சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் ராம் சங்கையா, தமிழ் சினிமாவுக்கு தரமான வரவு.
துக்க வீடு, ஒப்பாரி வைக்கும் பாட்டிகள், தண்டட்டியைக் கைப்பற்ற நினைக்கும் மகள்கள், அவர்களுக்குள் நடக்கும் அடிதடி, தாய் இறந்த சோகம் ஏதுமின்றி போதையில் தள்ளாடும் மகன், சூழ்நிலை தெரியாமல் மரியாதையை எதிர்பார்க்கும் சொந்தங்கள், சொலவம் சொல்லும் பாட்டிகள் என அசலான ஓர் உலகத்துக்குள், பார்வையாளர்களையும் ஒரு கேரக்டராக இழுத்துப் பிடித்து அமர வைத்து விடுகிறது, பிசிறில்லாத திரைக்கதை. அதற்கு அவர் தேர்வு செய்த நடிகர்களின் தேர்ந்த நடிப்பும் ஆழமாக கைகொடுத்திருக்கிறது. யூகிக்க முடியாத அந்த கிளைமாக்ஸ் ஆஹா.
தொடக்கத்தில், பார்வையாளர்களைக் கதைக்குள் இழுக்க கொஞ்சம் சிரமப்பட்டாலும் தண்டட்டி காணாமல் போனதும் எதிர்பார்ப்பு அதிகரித்து விடுகிறது. கான்ஸ்டபிளை போலவே பார்வையாளர்களும் ஒவ்வொருவரையாக யூகிக்கத் தொடங்குகிறோம். ஆனால், எல்லாம் முடிந்து சடலத்தைத் தூக்கும் நேரத்தில் புதுப்பிரச்சினையை கொண்டுவருவது, கதையை நீட்டிக்கும் முயற்சியாக அமைந்து ஏமாற்றத்தைத் தருகிறது.
விவகாரமான ஊரில் வில்லங்கமாக மாட்டிக்கொண்டு முதலில் முழித்து, பிறகு சமாளிக்கும் ஹெட் கான்ஸ்டபிள் கேரக்டரில் அருமையாகப் பொருந்தி இருக்கிறார் பசுபதி. அவர் உடல்மொழியும் அனுபவமும் அந்த கதாபாத்திரத்தை முழுமையாகத் தாங்கிப் பிடிக்கிறது.
தங்க பொண்ணுவாக ரோகிணி, கிராமத்து வயதான பெண்மணியை கண்முன் நிறுத்துகிறார். வீட்டிலிருந்து எதையாவது எடுத்துச் செல்வதையே நோக்கமாகக் கொண்ட மகள்களை நினைத்து கலங்கும்போது கவனிக்க வைக்கிறார். மகளாக வரும் தீபா சங்கர் கொஞ்சம் மிகை நடிப்பைத் தந்தாலும் செம்மலர் அன்னம், ஜானகி, பூவிதா, போதை மகன் விவேக் பிரசன்னா ஆகியோர் பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அதன் மண் மணத்தோடு நமக்கும் கடத்துகிறது. கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறது. சிவாவின் படத்தொகுப்பு, காட்சிகளைக் கச்சிதமாகச் செதுக்கியிருக்கிறது.
தாய் இறந்து கிடக்க, பேருக்கு கூட கண்ணீர் வடிக்காமல், அனைத்து மகள்களும் தண்டட்டியை கைப்பற்றுவதிலேயே குறியாக இருப்பதும் என்னதான் குடிகாரனாக இருந்தாலும் தாய்ப் பாசமின்றி மகன் தள்ளாடியபடி இருப்பதும் கதைக்குச் சுவாரஸ்யம் தந்தாலும் லாஜிக்காக ஒட்டவில்லை. இதுபோன்ற சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் ‘தண்டட்டி’வரவேற்கப்பட வேண்டிய படைப்பு.

Related posts