குறித்த மாரி செல்வராஜின் பேச்சு

’மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் இணைய வெளியில் விவாதத்தை கிளப்பியுள்ளன.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசிலுடன் இப்படத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்தச் சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்வு தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.
இதனைத் தொடர்ந்து விழா மேடையில் கமல்ஹாசன் முன்னிலையில் ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் இணைய வெளியில் விவாதத்தை கிளப்பியுள்ளன.

மாரி செல்வராஜ் பேசியதன் சுருக்கம்: ’மாமன்னன்’ படம் உருவானதற்கு காரணமே ‘தேவர் மகன்’ படம்தான். அப்படத்தை பார்த்த நாளிலிருந்து தான் ‘மாமன்னன்’ உருவானது. ’தேவர் மகன்’ பார்க்கும்போது எனக்கு வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்துமே ஏற்பட்டன. அந்த நாளை என்னால் கடக்கமுடியவில்லை. சினிமாவாக பார்த்த ஒரு படம் சமூகத்தை எப்படி புரட்டிப் போடுகிறது? என்னவெல்லாம் செய்கிறது? அது சரியா? தவறா? என்றெல்லாம் உழன்று கொண்டிருந்தேன்.

இன்று ‘தேவர் மகன்’ என்பது ஒரு மாஸ்டர்ஸ்ட்ரோக். எல்லா இயக்குநர்களுமே அப்படத்தைப் பார்த்து விட்டுத்தான் படம் எடுப்பார்கள். நானும் அப்படித்தான். ஆனால் ‘தேவர் மகன்’ எனக்கு மிகப்பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கிய படம். அன்றைய காலகட்டத்தில் நடந்தவை எல்லாம் அப்படித்தான் ரத்தமும், சதையுமாக இருந்தன. இதை எப்படி புரிந்துகொள்வது? இந்தப் படம் சரியா? தவறா? என்று புரியாமல் அப்படி ஒரு வலி. இந்த ‘தேவர் மகன்’ உலகில் பெரிய தேவர் இருக்கிறார், சின்ன தேவர் இருக்கிறார். அதில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி முடிவு செய்து என் அப்பாவுக்காக எடுத்த படம்தான் ‘மாமன்னன்’.

கமல்ஹாசன் உருவாக்கிய இந்தப் படம் இந்த நாட்கள் தாண்டியும், திரைக்கதையில் ஒரு மாஸ்டராக இருக்கிறது. நான் ‘பரியேறும் பெருமாள்’ எடுக்கும்போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுதான் எடுத்தேன். ‘கர்ணன்’ பண்னும்போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். ’மாமன்னன்’ பண்ணும்போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். வடிவேலு நடித்த அந்த இசக்கி கதாபாத்திரம்தான் ‘மாமன்னன்’. அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படம்” என்று மாரி செல்வராஜ் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கமல் ரசிகர்கள் பலரும் ‘தேவர் மகன்’ குறித்த மாரி செல்வராஜின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் எதிர்வினையாற்றி வருகின்றனர். படத்தின் காட்சிகளை ட்விட்டரில் பகிர்ந்து அது தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாரி செல்வராஜின் கருத்துக்கு ஆதரவாகவும் பலர் தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

Related posts