மாற்று தண்டவாளத்தில் 127 கி.மீ. வேகத்தில்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் 35 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

——

ரயிலின் 8 பெட்டிகள் வரை தடம் புரண்டதாகவும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது.

வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடப்பதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.

கவிழ்ந்து கிடக்கும் ரயிலுக்குள் இருந்து காயம் அடைந்த பயணிகள் மீட்கப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

—–

சரக்கு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் 127 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புவனேஷ்வர், மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12864) இயக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்தது எப்படி?

இந்நிலையில், மேற்குவங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்துகொண்டிருந்தது. அதேபோல், கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்றுகொண்டிருந்தது. ஷாலிமார் – சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.

அப்போது, அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் தண்டவாளத்தில் ஷாலிமார் – சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தவறுதலாக சென்றுள்ளது. காரக்பூர் ரெயில்வே கோட்ட கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த பெறப்பட்ட முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் பஜாரை கடந்த பின்னர் ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து தவறுதலாக மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நேற்று மாலை 6.55 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் சந்திப்பில் இருந்து மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அந்த தண்டவாளத்தில் ஏற்கனவே சரக்கு ரெயில் ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தில் சரக்கு ரெயில் நின்றுகொண்டிருந்த மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அப்போது, சரக்கு ரெயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துள்ளது. இதனால், தண்டவாளத்தில் தடம்புரண்டு கிடந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மின்னல் வேகத்தில் மோதியது. இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. இந்த கோர விபத்தில் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகளுன் தடம் புரண்டன.

இந்த கோர விபத்தில் மொத்தம் 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்குள்ளான நிலையில் இந்த ரெயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் பலர் பயணித்துள்ளதால் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேவேளை விபத்தில் உயிரிழந்த 261 பேரின் விவரங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்னல் மற்றும் தொழில்நுட்ப கோளாறு அல்லது மனித தவறு காரணமாக ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து மாறி சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த மாற்று தண்டவாளத்தில் தவறுதலாக சென்று சரக்கு ரெயில் மீது மோதியிருக்கலாம். இதன் காரணமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் தடம்புரண்டிருக்கலாம் அப்போது அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹவுரா எஸ்பிரஸ் ரெயில் கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இந்த விபத்து குறித்து ரெயில்வே அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் விசாரணை நிறைவடையும் போது தான் 3 ரெயில்கள் விபத்துக்கான முழுமையான காரணம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

—–

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒடிசா கோர ரெயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஒடிசாவுக்கு செல்கின்றனர். அவர்கள் அங்கு இருந்து களப்பணி ஆற்றுவர்.

மூன்று ரெயில்கள் மோதி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொள்வதற்கும், மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன். ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

—–

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 55 நபர்களை முதலுதவி சிகிச்சைக்குப் பின் விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புவனேஸ்வரில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னையில் 4 அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, வேலூர் மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை பிரிவு, பிணவறைகளை தயார் நிலையில் வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

—–

ஒடிசாவில் பாலசோர் பகுதியில் ரெயில் விபத்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் தவிப்புக்குள்ளானார்கள். விபத்துக்குள்ளான 2 பயணிகள் ரெயிலில் சுமார் 2 ஆயிரம் பயணிகள் பயணித்தது தெரிய வந்து உள்ளது. அவர்களில் பாதி பேர் காயம் அடைந்து உள்ளனர்.

சுமார் 1000 பயணிகள் அந்த பகுதியில் நேற்று இரவு தவிக்க நேரிட்டது. பலர் உடனடியாக பஸ்களை பிடித்து மற்ற பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர். தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து எப்படி செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர். அவர்களை குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் இன்று காலை செய்தனர்.

இதற்காக விபத்து பகுதிக்கு அருகே வரை சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேற்கு வங்காளத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்தும் சிறப்பு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது.

அந்த ரெயில் பத்ரக் நகரம் வரை சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றி சென்னை திரும்பும் என்று தெரிய வந்துள்ளது. அந்த ரெயிலில் 250 பயணிகள் அழைத்துவரப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல புவனேஸ்வரத்தில் இருந்தும் மற்றொரு சிறப்பு ரெயில் சென்னைக்கு இயக்கப்படுகிறது.

அந்த ரெயிலில் 133 பேர் அழைத்துவரப்படுகிறார்கள். மொத்தம் 383 பேர் ஒடிசாவில் இருந்து சென்னை திரும்புகிறார்கள் இவர்களை அழைத்து வரும் சிறப்பு ரெயில்கள் நாளை காலை சென்னை ரெயில் நிலையம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts