இராவண கோட்டம் மேலும் ஒரு குப்பை படம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரின் ஏனாதி கிராமத்தில் உள்ள மேலத்தெரு மற்றும் கீழத்தெருவைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மேலத்தெரு மக்களுக்காக போஸும் (பிரபு) கீழத்தெருவினருக்காக சித்ரவேலும் (இளவரசு) ஊர்த் தலைவர்களாக இருந்து வழிநடத்தி கொண்டு செல்ல, சாதியைக் கடந்த நட்பு மேலோங்குகிறது. அரசியல் ஊருக்குள் வந்தால் எங்கே பிரிவினை வந்துவிடுமோ என பயந்து, அரசியல் கட்சியினரைக் கூட ஊர்மக்கள் அனுமதிப்பதில்லை. இப்படியான சூழலில் அரசியல் சுயலாபத்துக்காக ஏனாதி கிராமத்தில் உள்ள இருவேறு சமூகத்தினரிடையே பிரிவினை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமெடுக்கின்றன. அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரின் உத்தரவின் பேரில் களமிறங்கும் உள்ளூர் எம்எல்ஏ அதில் வெற்றிகண்டாரா? இல்லையா? – இதுதான் படத்தின் திரைக்கதை.
நிலம் சார்ந்த மக்களின் வாழ்வியலை கண்ணாடியாய் பிரதிபலித்து தேர்ந்த கதைசொல்லியாய் கவனம் பெற்ற விக்ரம் சுகுமாரனின் அடுத்த படைப்பாக வெளியாகியிருக்கிறது ‘இராவணக் கோட்டம்’. 1957-ல் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த ‘கீழத்தூவல் படுகொலை’, சீமைக் கருவேல மர பிரச்சினை, கார்ப்ரேட் மாஃபியா என பல்வேறு விஷயங்களை காட்சிப்படுத்த முனைந்திருக்கிறார் இயக்குநர். மக்கள் சாதி ரீதியாக பிளவு பட்டிருப்பதற்கு அரசியல்வாதிகளின் சூழ்ச்சியே காரணம் என்பதை நிறுவும் படம், காதலை அதற்கான கருவியாக எடுத்துக்கொள்கிறது. ஆனால், அந்தக் காதல் காட்சிகள் வெறும் சம்பிரதாயமாக அணுகப்பட்டிருப்பதும், அதற்கு முட்டுக் கொடுக்க பாடல்களை துணைக்கு அழைத்திருப்பதும் தேவையான தாக்கத்தை கொடுக்கவில்லை.
மேலத்தெரு தலைவரான போஸ் கதாபாத்திரத்தின் இன்ட்ரோ காட்சி கண்ணியமாகவும், கீழத்தெரு தலைவரான சித்ரவேலுவை மது அருந்தி தகராறு செய்பவராக அறிமுகப்படுத்தியதிலிருந்தே படத்தின் அசமத்துவம் எட்டிப் பார்க்கிறது. ‘தல சாஞ்சிருச்சே’ பாடலில், ‘குனிஞ்சித்தான் கிடந்தவன அட நிமிர்ந்துதான் நடக்க வைச்சாரு’ என மேலத்தெருவைச் சேர்ந்தவர்கள் பாடி வரும் பாடல் வரிகள் ஆதிக்க மனநிலை. கீழத்தெருவைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தோம், ‘வேலை கொடுத்து நம்மல சரிசமமா நிக்க வைச்சது அவர்தான்’ போன்ற வசனங்களும், எளிதில் சதிவலையில் விழுவதும், பிரிவினைக்கு காரணமாக கீழத்தெருவைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் நெருடல். இறுதியில் ‘க்ளிஷே’ சம்பவங்களும் உண்டு.
வறண்ட பூமியில் வளர்ந்த இளைஞனின் சாயலை தரித்து, ஆக்ரோஷம் கலந்த யதார்த்த நடிப்பில் தனித்து தெரிகிறார் சாந்தனு பாக்யராஜ். ‘பரியேறும் பெருமாள்’ பட சாயலில் சூதுவாது தெரியாமல் ‘அப்படியா..!’ எனக் கேட்கும் அப்பாவி பெண்ணாக ‘கயல்’ ஆனந்தி தனது வழக்கமான நடிப்பை பதிய வைக்கிறார். ஆனால் அழும் காட்சியிலும், கொளுத்தும் வெயிலிலும் அவரிடம் மேக்அப் மட்டும் கலையாமல் இருப்பது யதார்த்தத்தை கூட்டவில்லை.
சமத்துவம் கோரும் சமூக தலைவராக பிரபுவின் உடல்கட்டும், கம்பீர தொனியும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது. மிகையில்லாத இளவரசு நடிப்பு கவனம் பெறுகிறது. சஞ்சய் சரவணன், முருகன் கதாபாத்திரங்கள் வில்லத்தனத்தில் அழுத்தம் கூட்டுகின்றன. தீபா சங்கர், அருள்தாஸ், தேனப்பன், சுஜாதா சிவகுமார் கதாபாத்திரம் கோரும் நடிப்பை தாராளமாக வழங்கியுள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை காட்சிகளுக்கான விறுவிறுப்பை கடத்துவதில் கச்சிதம் சேர்க்க, ஒப்பாரி பாடல் ஈர்க்கிறது. வெயில் மனிதர்களையும், கருவேல மரங்கள் சூழ்ந்த வறட்சி நிலப்பரப்பின் வெம்மையையும் காட்சிபடுத்தும் வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா இயல்புக்கு நெருக்கமான உணர்வை கொடுப்பது பலம். லாரன்ஸ் கிஷோரின் ‘கட்ஸ்’ திரைக்கதைக்கான கோர்வைக்கு உதவியிருக்கிறது. பல்வேறு விஷயங்களை காட்சிப்படுத்தும் படம் அதை மேலோட்டமாக அணுகியிருப்பதும், சில காட்சிகளைத் தாண்டி பெரிய அளவில் சுவாரஸ்யம் கிட்டாததும் இராவண கோட்டத்தில் உள்ளே பிரவேசிப்பதை சிரமமாக்குகிறது.

Related posts