பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு

உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நேற்று இரவு உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

உலக மீட்பராக அவதரித்த இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்று தினங்களின் பின்னர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஸ்டிக்கப்படுகின்றது.

பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஆலய விளக்குகள் அணைக்கப்பட்டு புது தீமுட்டி மெழுகுதிரி ஏற்றி உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்களினால் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன.

இதன்போது இயேசு பிரான் உயிர்த்தெழும் நிகழ்வினை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திருச்சொரூபம் ஆயரினால் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது மெழுகுதிரி செபிக்கப்பட்டு நீரினுள் அமிழ்த்தப்பட்டு புனித நீர் பக்தர்களுக்குத் தெளிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

இதன்போது 2019 ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின் போது உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு வழிபாட்டினை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts