பிரான்ஸ் பெண் அமைச்சருக்கு வலுக்கும் எதிர்ப்பு

‘ப்ளே பாய்’ கவர்ச்சிப் பத்திரிகையின் அட்டைப் படத்துக்கு போஸ் கொடுத்ததால் பிரான்ஸ் நாட்டு பெண் அமைச்சர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு கவர்ச்சிப் பத்திரிகைக்கு போஸ் கொடுத்து, பேட்டியளித்தது பெண்ணியம் என்று அவர் நினைத்துக் கொண்டதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மார்லீன் ஸ்கியாபா பிரான்ஸ் நாட்டின் சமூக பொருளாதாரத் துறை அமைச்சராக இருக்கிறார். 40 வயதான இவர் பெண்ணிய எழுத்தாளரும் கூட. ஏற்கெனவே இவர் பல்வேறு கருத்துகளைக் கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இந்நிலையில், தற்போது அவர் ப்ளேபாய் பத்திரிகைக்கு போஸ் கொடுத்து விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

ப்ளே பாய் கவர்ச்சிப் பத்திரிகைக்கு போஸ் கொடுத்துள்ள அவர், பெண்கள் உரிமை, தன்பாலின உறவாளர்கள் உரிமை, கருக்கலைப்பு உள்ளிட்டவை பற்றி 12 பக்க அளவில் ஒரு நீண்ட பேட்டியும் கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்கள் தங்கள் உடலைக் கொண்டு என்ன செய்ய விரும்புகிறார்களோ, அதைச் செய்யலாம். எங்கேயும், எப்போதும். பிரான்ஸில் பெண்கள் சுதந்திரமாக உள்ளனர். அது சில பழமைவாதிகளுக்கும் நயவஞ்சகர்களுக்கும் உறுத்தலாக இருக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த ட்விட்டர் பதிவு அரசாங்கத்தில் இருக்கும் சில அமைச்சர்களையே அதிருப்தியடையச் செய்துள்ளது.

இதனிடையே, பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்ந்தும் அதிபர் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தொடர் போராட்டங்கள் காரணமாக பிரான்ஸில் உள்நாட்டு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் எலிசபத் போர்ன், ‘இப்போது நாடு இருக்கும் சூழலில் இது தேவையற்றது’ என்று தனது அதிருப்தியை மார்லீனிடம் தொலைபேசி வாயிலாகவே தெரிவித்துவிட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts