கலைப்பாலமாக திகழ்கிறார் மு. நித்தி

பவளவிழா நாயகன் மு. நித்தி என்ற எனது இனப்பெரியனுக்கு விழா எடுக்க முன்வந்த பவளவிழாக் குழுவினருக்கு முதலில் எனது நெஞ்சு நிறைந்த நன்றி.

விழா நடத்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட ‘பந்தல் நடுகால்’ தருணத்தில், சமூகவழிகாட்டியான மு. நித்தியை வாழ்த்துமுகமாகவும், பாராட்டுமுகமாகவும், நயக்குமுகமாகவும், எடைபோடுமுகமாகவும் விழா மலரில் எழுதுவதற்கு முன்வந்திருக்கும் சமூகவழிகாட்டிகளைப் போற்றி வணங்குகிறேன்.

மு. நித்தியை நான் எங்கே முதலில் சந்தித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால், எங்கே முதலில் கண்டேன் என்பது மனதில் பசுமையாக இருக்கிறது.

நாடகமுனி குழந்தை ம. சண்முகலிங்கம் யாழ்ப்பாணத்தில் நிறுவியிருக்கும் நாடக அரங்கக் கல்லூரியின் அரங்கப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள, வார இறுதிகளில் கொழும்பில் இருந்து கிரமமாக நான் யாழ்ப்பாணம் போய்வரும் 1977-78 நாட்கள் அவை! ஒரு சனி மாலை, நாடகப் பயிற்சிகளை நேரத்தோடு முடித்துக்கொண்டு, யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு ஒரு நாடகம் பார்க்கச் சென்றிருந்தோம்.

அங்கே, வெளியே அமைந்திருந்த தேநீர்க் கொட்டில் முன்பாகக் கிடந்த வாங்கில் அமர்ந்தோம். சிறிது அப்பால் இன்னொரு வாங்கு! அதில் ஒரு இளைஞர், இணக்க நெருக்கத்தோடு தம்மை மொய்த்து நின்ற இளைஞர்கள் சிலருக்கு, இருபதாம் நூற்றாண்டுத் தத்துவஞானி கெயின்ஸ் அருளிய பொருளாதாரக் கொள்கையின் சூட்சுமங்கள் தொடர்பாக இலகு தமிழில் விளக்கம் பொழிந்து கொண்டிருந்தார். மணி அடித்ததும் மண்டபத்துக்குள் போய்விட்டோம். இடைவேளையில் பார்வையால் துளாவினேன். ஆள் கண்ணில் தட்டுப்படவேயில்லை..

“அவரோ? மூனா நித்தியானந்தன்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொருளியல்துறை விரிவுரையாளர்! ஆள் வலு கெட்டிக்காரன்!. நல்ல விளக்கமாப் பேசுவார்!” என்று கலைவளன் சிசு நாகேந்திரா, என்னைப் புரிந்துகொண்டு தாமாகவே விதப்புரை விளக்கம் தந்தார். அன்றே ஆளைச் சந்தித்து அளவளாவ முடியவில்லையே என்ற மனவாட்டம் எனக்கு!

ஆனாலும், அடுத்து வரும் மூன்று நான்கு தசாப்தங்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சமுதாயம், நல்லறிஞர் ஒருவரின் தொலைநோக்குடனான தெளிவான வழிகாட்டுதலைப் பெற்று, நம் மண்ணை வளப்படுத்தப் போகின்றது என்ற எதிர்பார்ப்புத் திருப்தி எனக்கு!

நல்லறிஞர் மு. நித்தியை அடுத்த தடவை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்க இருபது ஆண்டுகள் பிடித்தன. அந்தத் தடவையும் சந்தித்து உரையாடும் பாக்கியம் உடனே கிடைக்கவில்லை. லண்டன் ஈஸ்ற்ஹாம் நகரில் இடம்பெற்ற நூல் அறிமுகவிழா ஒன்றில், “மு. நித்தி நூலாய்வு செய்கிறார். வாருங்கள்” என்று நம் தமிழ் ஓவியர் கே. கே. ராஜா அலைபேசிக் கட்டளை அனுப்ப, ஆவலோடு ஓடிச் சென்றேன். நித்தியின் நக்கீர நூலாய்வு விருந்து அருந்தினேன்.

கூட்டம் முடிந்த பின்னர் அவருடைய யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவருடைய உரையை நயந்த ஏனையோரும் குவிந்து நின்றார்கள். சிறிது நேரம் காத்திருந்துவிட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினேன்.

இந்தத் தடவையும் ஆளைப் பார்த்ததோடு சரி. பேச முடியவில்லையே! ஈஸ்ற்ஹாமில் இருந்து வீடு திரும்பும் வழியெல்லாம் நித்தியின் நினைவோடிருந்த மனம் வேகமாகப் பின்னோக்கிப் பாய்ந்தது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், யாழ் பல்கலைக்கழகத்தில் பிடித்தமான விரிவுரையாளர் பதவி, வசதியான ஊதியம், ஒளிமயம் காட்டும் எதிர்காலம் என்ற நிலையில்,` குடை நிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்ந்தவர்` நித்தி!

இரக்க சுபாவமும் மானுடநேயமும் ஓடி உதவும் பண்பும் அவருடைய இயல்பான அணிகலன்கள்! அவருடைய அமைதி வாழ்க்கைக்கு எமனாக இவையே வந்தமைந்தன என்று துணிந்து கூறலாம்!

ஒரு குரூர நெருப்புக் கடலை, எதுவித தயக்கமும் இன்றி, முக்கி முக்குளித்து நீந்திக் கடந்தவராக இன்று நம் முன் நித்தி நிற்கிறார்.

லண்டன் அகதிக் கூண்டை வந்தடைந்த மு. நித்தி, மண்ணிலே தாம் சுகித்த வளமான வசதி-வாழ்க்கை பறிக்கப்பட்டமையையொட்டி ஏங்கி ஒடுங்கி ஒதுங்கவில்லை. யார் மீதும் பழி சுமத்தவுமில்லை.

மண்ணிலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் வாழும் கலை இலக்கிய ஆளுமைகளுடன் ஆக்கத் தொடர்புகளை நிறுவி, மொழிவழி ஒன்றிணைப்பை முன்னெடுக்கும் ஒரு கலைப்பாலமாக, நித்தி இன்று திகழ்கிறார். தத்தமக்குரிய ஆக்கப்பணிகளை மறந்து, உறைநிலைப் படுக்கையில் இருக்கும் நம் இன முனைப்பாளர்களின் முன்னிலையில் உயிர் மீண்ட, உயிர்க் கூர்ப்பாளன் மூனா நித்தியானந்தனை அவனுடைய பவளவிழாவில் கூடி, வாழ்த்துப் பொங்கல் குரவையிட்டு வாழ்த்துவோமா?

ஈழக்கூத்தன்
ஏ.சீ.தாசீசியஸ்

(இலங்கையின் நவீன தமிழ்நாடக முன்னோடியாக போற்றப்படுபவர் ஏ.சீ. தாசீசீயஸ். நேர்த்தியான நாடக நெறியாளராக திகழ்பவர். ‘கந்தன் கருணை’, ‘புதிய வீடு’, ‘கோடை’, ‘பொறுத்தது போதும்’, ‘சிறிசலாமி’ ஆகியன இவரின் பேர் சொல்லும் நாடகங்கள் ஆகும்)

Related posts