தேர்தலை நடத்தாதிருப்பதே அரசாங்கத்தின் ஒரே நோக்கம்

இதற்கு முன்னர் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் இருபத்தி இரண்டு தடவைகளுக்கு மேல் முயற்சித்துள்ளதாகவும், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் ஒரே நோக்கம் தேர்தலை நடத்தாதிருப்பதே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மக்களுக்கு தங்களின் ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காவிடின் ஜனநாயகம் சீர்குலைந்து போவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஜனநாயகத்தை சீர்குலைக்கவா அரசாங்கம் முயற்சிக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை அடக்குவதற்கு அரசாங்கம் கண்ணீர் புகை பிரயோகங்களைப் பிரயோகிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர்,நச்சுத் தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், நச்சுத்தன்மையற்றதாக இருந்தாலும் மக்கள் போராட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு எத்தகைய உரிமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) காலை வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து ஆசி பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவரை தியவதன நிலமே நிலங்க தெலபண்டார வரவேற்றார்.

அதன் பின்னர், மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து மகா விஹாராதிபதி சியாமோபாலி மகா நிகாயாவின் மல்வத்து மகா விகாரை பிரிவின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்து மகா விஹாராதிபதி ஷ்யாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரி மகா விகாரையின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.

முதலில் மகாநாயக்க தேரர்களின் நலன் விசாரித்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதோடு, எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய வகிபாகத்திற்கு மகாநாயக்க தேரர்களின் பாராட்டும் கிடைக்கப்பெற்றது.

பின்னர் கண்டி மீரா மக்கம் பள்ளிவாசலுக்கும்,கட்டுகெலே இந்து ஆலயத்திற்கும் சென்று எதிர்க்கட்சித் தலைவர் சர்வமத ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்.

Related posts