பல்கலை மாணவர் மீதான தாக்குதல் நடவடிக்கை

கொழும்பு பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசித்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது, படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் உரிய பணிப்புரைகளை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் நிலவிய உள்ளக பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன. இதைச் சபையில் சுட்டிக் காட்டிய அமைச்சர், இத்தகைய சூழ்நிலையிலேயே பௌத்த, பாளி பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து அன்று குழப்பத்தை ஏற்படுத்தினரென்றும் அவர் தெரிவித்தார்.

இதுவே, பல்கலைக்கழகங்களுக்குள் காணப்படும் உள்ளக பிரச்சினைகளை விடுத்து, நாட்டின் பொது பிரச்சினைகளுக்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்பி புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். புத்திக பத்திரண எம். பி தமது கேள்வியின் போது,

நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ளே பிரவேசித்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டதன் காரணத்தாலேயே ஒருவர் மரணம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில்தான், நாட்டின் ஜனாதிபதியும் சபாநாயகரும் கல்வி அமைச்சரும் கல்வி பயின்றனர்.

இத்தகைய புகழ்மிக்க பல்கலைக்கழகத்துக்குள் படையினர் பிரவேசித்து இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை கவலைக்குரியது. அது தொடர்பில் கல்வியமைச்சர் என்ற வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் மேற்படி நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts