30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடல் தகனம்

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல், 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம் (78). தேசிய விருதை 3 முறை பெற்றவர். பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். மத்திய அரசால் சமீபத்தில் இவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இவரது கணவர் ஜெயராம் கடந்த 2018-ல் காலமானார். அதன்பிறகு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாணி ஜெயராம் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நெற்றியில் காயத்துடன் வாணி ஜெயராம் தனது வீட்டில் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார்.

பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, நேற்று முன்தினம் மாலை உறவினர்களிடம் வாணி ஜெயராம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் உடல் வைக்கப்பட்டது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் இரவு நேரில் வந்து வாணி ஜெயராம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை அஞ்சலி செலுத்தி, வாணி ஜெயராமின் சகோதரி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘திரைவானில் முடிசூடா இசைவாணியாக விளங்கிய வாணி ஜெயராம் மறைவால், தமிழகம் குறிப்பாக திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் பிறந்து 19 மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி, புகழ் கொடி நாட்டியவர். 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மாபெரும் சரித்திர சாதனை படைத்திருக்கிறார். சமீபத்தில்தான் அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அதை பெறும் முன்பே, மறைந்துவிட்டார்’’ என்றார்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். அவர் கூறியபோது, ‘‘வாணி ஜெயராம் மறைந்தாலும், தேனிலும் இனிய அவரதுமெல்லிய இன்னிசை குரல் இந்த உலகம் உள்ள வரை ஒலிக்கும். அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தபோது, ‘வாசலிலே இரட்டை இலை கோலம் போடுங்கள்’ என்று வாணி ஜெயராம் பாடிய பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது’’ என்றார்.

பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். அவர் கூறியபோது, ‘‘வாணி ஜெயராம் அற்புதமான பாடகர். நேர்மைக்கு சொந்தக்காரர். மத்திய அரசின் மிக உயரிய பத்மபூஷண் விருது கடந்த ஜன.26-ம் தேதிதான் அவருக்கு அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, வாணி ஜெயராமின் வீட்டுக்கு சென்று, விருது பெற்றதற்காக தேசியத் தலைவரின் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு சென்றார். பத்மபூஷண் விருதை வாங்குவதற்குள் அவர் மறைந்தது வேதனை அளிக்கிறது’’ என்றார்.
நடிகர்கள் சிவகுமார், ஒய்.ஜி.மகேந்திரன், பாண்டியராஜன், மனோபாலா, நடிகை சச்சு, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, தினா, கணேஷ், பாடகர்கள் சித்ரா, சுஜாதா, ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட திரையுலகினர், அரசியல் கட்சியினர், இசை ரசிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வாணி ஜெயராம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, நேற்று மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து வாணி ஜெயராம் உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அண்ணா சாலை வழியாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு காவல் துறையினர் சார்பில் 30 குண்டுகள் முழங்க, வாணி ஜெயராம் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள், ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.பின்னர், மின் மயானத்தில் வாணிஜெயராம் உடல் தகனம் செய்யப்பட்டது.

மரணத்தில் சந்தேகம் இல்லை: காவல் துறை தகவல்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வாணி ஜெயராம் நேற்று முன்தினம் நெற்றியில் காயத்துடன் சடலமாக கிடந்தார். இதையடுத்து, இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் ஆயிரம்விளக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அவரது உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது. உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த அறையில்தான் வாணி ஜெயராம் இறந்து கிடந்தார். இதனால், அவரது மரணத்தில் ஆரம்ப கட்டத்தில் இருந்தே சந்தேகம் இல்லை.

எனினும், இறப்புக்கான உண்மையான காரணத்தை அறிவதற்காகவே பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த அறிக்கை விவரமும் கிடைத்துள்ளது. அதன்படி, வாணி ஜெயராம் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. வயது முதிர்வு காரணமாக, நடக்கும்போது தவறி கண்ணாடி மேஜை மீது விழுந்ததில் நெற்றிப் பொட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதுவே உயிரிழப்புக்கும் காரணமாகி உள்ளது. மேலும், கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தோம். அதில், வீட்டுக்கு வெளியே இருந்து யாரும் உள்ளே வரவில்லை. வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவும் இல்லை.

சந்தேகிக்கும்படி எதுவும் இல்லை. தடயவியல் துறையினரின் அறிக்கையும் பெறப்பட்டது. அதிலும் அவர்கள் எந்த சந்தேகமும் தெரிவிக்கவில்லை. எனவே, வாணி ஜெயராம் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts