தலைக்கூத்தல்: திரை விமர்சனம்

கோமா நிலையில் படுக்கையில் இருக்கும் தன் தந்தை முத்து (கலைச் செல்வன்), ஒரு நாள் கண் விழிப்பார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவரைக் கண்போல் காத்துப் பராமரிக்கிறார் மகன் பழனி (சமுத்திரக்கனி). ஆனால், அவர் மனைவி (வசுந்தரா), மாமனார், மைத்துனர் ஆகியோர் பழனியின் நம்பிக்கை கண்மூடித்தனமானது என அழுத்தம் கொடுக்கின்றனர். ‘தலைக்கூத்தல்’ முறையில் அவரைக் கருணைக் கொலை செய்ய வற்புறுத்துகிறார்கள். அதற்கு இணங்காத பழனியின் குடும்பச் சூழ்நிலை, கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க, அவர் என்ன முடிவு எடுத்தார் என்பது கதை.

‘லென்ஸ்’, ‘த மஸ்கிடோ பிளாசபி’ ஆகிய சுயாதீனப் படங்கள் வழியாக, சமகால வாழ்க்கையில் மலிந்திருக்கும் அழுக்குகளைச் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தி விழிப்பூட்டியவர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். அவரது மூன்றாவது படமாக வெளிவந்துள்ளது ‘தலைக்கூத்தல்’. இதிலும் முதன்மைக் கதாபாத்திரங்களை உளவியல் ரீதியாக எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்டவையாக, இருத்தலியல் சிக்கலை மீறி நடைபோட முடியாதவையாகப் படைத்திருக்கிறார்.

‘தலைக்கூத்தல்’ எனும் வழக்கத்தை சமூக இழிவாகச் சாடியும் எள்ளல் செய்தும் இதற்குமுன் 2 படங்கள் (கேடி, பாரம்) வெளிவந்திருக்கின்றன. இந்தப் படமோ, தந்தை – மகனுக்கு இடையிலான பிணைப்பையும் உடல் இயங்காமல் போனாலும் நினைவுகளின் வழியே உயிர் வாழ முடியும் என்கிற மனித மனதின் ஆற்றாமையையும் இணைகோடாகச் சித்தரிக்க, ‘தலைக்கூத்த’லை ஓர் ஓவியக் கித்தான் போல்பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

பாதிக்கும் அதிகமான காட்சிகள் ‘உரையாட’லின் பிடிமானத்துடன் அமைக்கப்பட்டிருகின்றன. அதேநேரம், உரையாடல் குறைந்து, உணர்வுகள் மட்டுமே வெளிப்படும் காட்சிகளும் கதாபாத்திரங்களின் வாழ்விடத்துக்கு அழைத்துச் செல்லும் நிலவெளிக் காட்சிகளும் இயக்குநரின் தேர்ச்சிமிக்க ’காட்சி கற்பனை’யாக உருப்பெற்று, சிறந்த திரை அனுபவத்தை வழங்குகின்றன.

மேஜிக்கல் ரியலிசம்’ என்கிற உத்தியை கதாபாத்திர உளவியல் சிக்கலுடன் நுட்பமாகப் பொருத்தி, அதுபற்றி அறிந்திராத பார்வையாளர்களும் ரசிக்கும் வண்ணம் எளிமையான விஷுவல் எஃபெக்ட் மூலம் சித்தரித்திருப்பது, படத்தின் கதை சொல்லலுக்கு ‘சர்ரியலிச’ தன்மையை வழங்கியிருக்கிறது.

படத்தின் ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு, விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை ஆகியன கதை சொல்லலில் படைப்புப் பங்களிப்பாக மாறியிருக்கின்றன. பழனியாக வரும் சமுத்திரக்கனி, அவர் மனைவி கலைச்செல்வியாக வரும் வசுந்தரா, பழனியின் இளவயது அப்பா கதிர், வயது முதிர்ந்த அப்பாவாக வரும் கலைச்செல்வன், பேச்சியாக வரும் வங்காள நடிகர் கதா நந்தி, பழனியின் மகள் ராஜியாக வரும் விஸ்ருதா என படத்தில் வரும் அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

தலைக்கூத்தல் என தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும் உயிர் என்பது ரத்தம் சதையால் மட்டும் இயங்குவதல்ல; உணர்வுகளாலும் நினைவுகளாலும் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் வாழ்க்கையின் ஆதார சக்தி என்பதை, அப்பா – மகன் கதாபாத்திரங்கள் வழியாக உணர்த்திச் செல்கிறார் இயக்குநர். அவசியம் பார்க்க வேண்டிய படைப்பு.

Related posts