2024-ல் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல்?

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் பலனாக 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அவரை முன்னிறுத்த முனைப்பு காட்டப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க முன் வருமா எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

காங்கிரஸின் தேசிய தலைவராக பதவி வகித்த ராகுல் காந்தி கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சோனியா காந்தியே கட்சியின் இடைக்கால தலைவராக நீடித்தார். ஒருவழியாக, புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டு, இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இச்சூழலில், ராகுல் தற்போது, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட முயல்கிறார். இதற்கு அடிப்படையாக ராகுல் கடந்த செப்டம்பர் 7-ல் தொடங்கிய ‘ஒற்றுமை யாத்திரை’ அமைந்துள்ளது. இதன்மூலம், சுமார் 2,800 கி.மீ. தொலைவை அவர் பாதயாத்திரையாக கடந்துள்ளார். சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ள அவரது பாதயாத்திரை ஜனவரி 26-ல் ஜம்மு-காஷ்மீரில் முடிவடைய உள்ளது.

இதற்கிடையில் இமாச்சலபிரதேசம், குஜராத் சட்டப்பேரவை தேர்தல்களிலும் அவர் கவனம் செலுத்தவில்லை. ராகுல் சுத்தமாகப் புறக்கணித்த போதிலும் இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. குஜராத்தில் அவர் தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தால் அங்கும் வெற்றி கிடைத்திருக்கும் என்ற கருத்து உள்ளது. இவை எதையும் காதில் போட்டுக்கொள்ளாத ராகுலின் முழு கவனமும் 2024 மக்களவைத் தேர்தலை நோக்கியே உள்ளது. பாஜகவை போல், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறாமல் மாநிலங்களில் ஆட்சி அமைக்க முடியாது என்பது ராகுலின் கருத்தாக உள்ளது. ராகுலின் யாத்திரைக்கு தென்னிந்திய மாநிலங்களில் அதிக வரவேற்பு இருந்தது.

கேரளாவில் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் அங்கு ஆளும் வாய்ப்பை அடுத்த தேர்தலில் எதிர்நோக்குகிறது. கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி ஆட்சி அமைத்தும் அது பாஜகவின் அரசியல் சூழ்ச்சியின் முன் நிற்கமுடியாமல் போனது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிராந்தியக் கட்சிகளின் வலுவால் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை. எனினும் இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக இன்னும் வளராதது காங்கிரஸுக்கு மகிழ்ச்சியே. இதேநிலை ஒடிசாவிலும் காங்கிரஸுக்கு தொடர்கிறது.

காங்கிரஸ் செல்வாக்கு அடிப்படையிலேயே ராகுலின் யாத்திரை தமிழகத்தில் 3 நாட்கள், சிறிய மாநிலமான கேரளாவில் 18 நாட்கள், கர்நாடகாவில் 21 நாட்கள், தெலங்கானாவில் 12 நாட்கள் என தொடர்ந்தது.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். ஆனால் இங்கும் கர்நாடகாவை போலவே, பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுக்க வேண்டியதாயிற்று. எனினும், இதே கூட்டணியுடன் வரும் தேர்தல்களில் பாஜகவை எதிர்கொள்ள மகாராஷ்டிராவில் ராகுல் 14 நாட்கள் யாத்திரை நடத்தினார். இதேவகையில் ஆட்சியை இழந்த ம.பி.யிலும் காங்கிரஸுக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் நம்பிக்கை உள்ளது. ராஜஸ்தானில் அடுத்த தேர்தலுக்கு பிறகும் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

எனவே, ம.பி.யில் 18 நாட்கள், ராஜஸ்தானில் 16 நாட்கள் நடந்தார் ராகுல் காந்தி. ஹரியாணாவிலும் வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற முயற்சிப்பதால் அங்கு 11 நாட்கள் யாத்திரை நீடித்தது. ஜனவரி 3 முதல் 26 வரை உ.பி., பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரை ராகுல் கடக்கவுள்ளார்.

குஜராத், பிஹார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என பலவற்றில் ராகுல் யாத்திரை மேற்கொள்ளவில்லை. எனினும் அம்மாநிலங்கள் பலவற்றில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு காங்கிரஸுக்கு உள்ளது. இவற்றை வைத்து ராகுல் தனது ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தன்னையே எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த திட்டமிடுவதும் தெரிகிறது. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியால் அவரை நேரடியாக எதிர்க்க ஒரு வேட்பாளரை நிறுத்தாமல் பாஜகவை வெல்வது கடினம்.

இதை நன்கு புரிந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கத் தயாராகிவிட்டனர். இதில், தமிழகத்தை ஆளும் திமுக முதலிடம் வகிக்கிறது. இதையடுத்து பிஹாரின் கட்சிகள் தங்கள் ஆதரவை ராகுலுக்கு அளித்துள்ளன. இங்கு லாலுவின் மெகா கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. இக்கூட்டணியில் சமீபத்தில் மீண்டும் இணைந்த முதல்வர் நிதிஷ்குமாரும் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தனது செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் மூலம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி, ஒடிசாவின் பிஜு ஜனதா தளம், டெல்லி, பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி, உ.பி.யின் பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் மட்டும் தொடர்ந்து ராகுலுடன் காங்கிரஸையும் ஏற்க மறுக்கின்றன.
இவர்களை எதிர்கொள்ள, ராகுலுக்கு தனது ஒற்றுமை யாத்திரையில் கிடைத்த பலன் மட்டுமே ஆயுதமாக இருக்க முடியும். 2024 மக்களவை தேர்தலில் பலன் கிடைக்காவிட்டாலும், பாஜகவுடன் மோதும் சரிநிகர் கட்சியாக உயரும் வாய்ப்பு காங்கிரஸுக்கு உள்ளது.

Related posts