த்ரிஷாவின் ‘நாயக’ பிம்பம் கைகொடுத்ததா?

தனியார் ஆன்லைன் செய்தி நிறுவனம் ஒன்றில் பத்திரிகையாளராக வேலை பார்த்து வருகிறார் தையல் நாயகி (த்ரிஷா). அவரது அண்ணன் மகளை வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் எழ, அது தொடர்பான விசாரணையில் இறங்குகிறார் தையல் நாயகி. போலி ஃபேஸ்புக் கணக்கு மூலமாக நடைபெறும் இந்த விவகாரம் ஒருகட்டத்தில் முடிவுற்றதாக நினைக்கும்போது, அது வெறொரு பாதையில் வெளிநாடு வரை நீள்கிறது. இறுதியில் இதற்கெல்லாம் யார் காரணம் என்பதுடன் அறியப்படாத காதல் ஒன்றை தையல் நாயகியின் வழியே சொல்லியிருக்கும் படம் தான் ‘ராங்கி’.

இயக்குநர் முருகதாஸ் கதையை படமாக்கியிருக்கிறார் ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் எம்.சரவணன். படத்தின் மையச்சரடான காதலை அதற்கேயுண்டான அழுத்தத்தில் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ஈர்ப்பு. அதையொட்டி படம் பேச முயற்சித்திருக்கும் சர்வதேச அரசியலும், வளம் கொழிக்கும் நாடுகளை குறிவைத்து சுரண்டும் ஆதிக்க நாடுகள் குறித்தும், அதனால் உருவாகும் போராளி குழுக்கள், பறிக்கப்படும் உரிமைகள் என காதலைச் சுற்றி எழுப்பியிருக்கும் திரைக்கதை கவனம் பெறுகிறது.

ஆனால், அந்தக் காட்சிகளும் அழுத்தமில்லாமல் மேலோட்டமாக கடந்திருப்பது முழுமையான உணர்விலிருந்து விலக்கி விடுகிறது. கபிலன் வரிகளில் ‘பனித்துளி’ பாடல் தேவையற்ற திணிப்பு என்றபோதிலும் அதன் காட்சியமைப்பும்,சத்யாவின் பின்னணி இசையும் ஈர்க்காமலில்லை. ஆலீம் – தையல் நாயகி இடையிலான உறவை கட்டமைத்திருக்கும் விதமும், அதற்கான காட்சிகளும் வெகுவாக ரசிக்க வைக்கிறது.

பத்திரிகையாளராக த்ரிஷா, ஒருவித திமிரான உடல்மொழியில், அடங்க மறுக்கும் அழுத்தமான கதாபாத்திரத்தில் முழுமையான தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அவருக்கான ஓவர் ‘ஹிரோயினிச’ ஸ்டன்ட் காட்சிகள் நெருடல். எத்தனை பேர் வந்தாலும் ஒற்றை ஆளாக மிரட்டி பணியவைப்பது, கையில் எந்தவித ஆயுமில்லாமலிருக்கும் த்ரிஷா, துப்பாக்கியால் சுட்டபடியே முன்னேறுபவர்களை அசலாட்டாக அடித்து துவம்சம் செய்வது, பறந்து, தாவி தப்பிச்செல்லும் காட்சிகள் ஓவர் டோஸ். சிங்கிள் ஷாட்டில் த்ரிஷா பேசும் நீண்ட வசனங்கள் மெனக்கெடலை உறுதி செய்கிறது.

அவரைத் தவிர்த்து சுஸ்மிதாவாக நடித்திருக்கும் அனஸ்வர ராஜன் மற்றும் ஆலிம் கதாபாத்திரத்தில் நடித்திப்பவரின் நடிப்பு நேர்த்தியாகவும் யதார்த்தையொட்டி இருப்பது காட்சிகளுடன் எளிதாக ஒன்ற உதவுகிறது. தவிர, ஜான் மஹேந்திரன், லிசி ஆன்டனி, கோபி கண்ணதாசன் தேவையான நடிப்பை வழங்குகின்றனர். படத்தில் தையல் நாயகியிடம் மாணவி ஒருவர் தனது முகத்தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மைக்குள்ளாகும்போது, அவர், ‘படித்து பணம் சம்பாதித்து தோற்றத்தை மாற்றிக்கொள்’ என்கிறார். ’பெண்ணிய கருத்துகளை அழுத்தமாக பேசும் பத்திரிகையாளரான தையல் நாயகி மறைமுகமாக அழகில்லை என்பதன் பொருட்டு அவரது தோற்றத்தை மாற்றியமைப்பதன் தேவையை உணர்த்துவது ஏனோ?

படத்தின் முக்கியமான சிக்கல் அடைக்க முடியாத தர்க்கப் பிழைகளுடன் தவிக்கும் அதன் முதல் பாதி. வீடியோ வெளியிடுவதற்கு பெண் சொல்லும் காரணம், மிகவும் பலவீனமாக எழுதப்பட்ட போலீஸ் கதாபாத்திரம், வசனம் மூலம் வகுப்பெடுக்கும் பிரச்சார பாணி, நெருக்கடியான சூழலில் கையில் துப்பாக்கியை வைத்து மற்றொரு கையில் சாட் செய்யும் ஆலிம், பிரச்சினைக்குரிய ஃபேஸ்புக் பக்கத்தை தொடர்ந்து பயன்படுத்துவது, லிபியாவிலிருக்கும் ஒருவர் சென்னை கிண்டி காவலரை கொல்ல ஆள் அனுப்புவது, சிபிஐ நெற்றியில் துப்பாக்கி வைக்கும் த்ரிஷா என நீளும் பட்டியல் அயற்சி.

அதேசமயம் இரண்டாம் பாதியில் சர்வேச அரசியலையும், காதலையும் பேசியிருக்கும் விதம் பெரும் ஆறுதல். ‘எல்லா நாட்லையும் ஆண்களுக்கு நல்லா லவ் பண்ண தெரியுது.ஆனா அத தொடர்ச்சியா பண்ண தெரியல’, ‘உரிமைக்காக தாழ்மையுடன் பேசுறது’, ‘8 கோடி மக்களை ஒரு பெண்ணால கண்ட்ரோல் பண்ணி வைக்க முடிஞ்சது’ போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
படத்தின் இறுதியில் ‘எனது நாட்டில் வளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் நானும் என் நாடுட தலைவரும் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்’ என்ற வசனம், சர்வாதிகாரத்தால் உண்டான போராளிக் குழுக்கள், உள்ளிட்டவையும் இறுதிக்காட்சியும் படத்தை தனித்து காட்டுகிறது. துனிஷியா நாட்டின் வறண்ட நிலப்பரப்பின் சூடான மணைலையும், அதன் வழியே எழும்பியிருக்கும் முகடுகளையும், யதார்த்தம் மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளரின் சக்திவேலின் கேமிரா மிரட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘ராங்கி’ த்ரிஷாவின் ‘ஹிரோயினிச’ பிம்பத்தை கட்டமைக்க எழுப்பபட்டிருக்கும் திரைக்கதையால் தர்க்கப்பிழைகளை நிகழ்த்தி தடுமாறியிருக்கிறது. தவிர்த்து, கதையின் ஆன்மாவுக்கு நியாயம் சேர்க்கும் காட்சிகளின் போதாமையை இறுதிவரை உணர முடிகிறது.

Related posts