திருமணமாகாத ஆண்கள் மகாராஷ்டிராவில் பேரணி

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிய உதவும் சோதனைக்கு தடை இருந்தும் அதை கடுமையாக பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்தியாவில் ஆண் – பெண் விகித்தாச்சாரம் குறைந்தால் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.

பல மாநிலங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 800 பெண்கள் என்றும் சில மாநிலங்களில் அதற்கும் குறைந்த நிலையிலும் உள்ளது. இதனால் திருமணத்துக்கு பெண்கள் இல்லாத சூழ்நிலையில், ஆண்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி 50-க்கும் மேற்பட்ட திருமணமாகாத ஆண்கள், மணமகன் அலங்காரத்தில் பேரணியாக சென்றனர்.

சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வை சீர்செய்யக் கோரியும், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிய உதவும் சோதனையைத் தடை செய்யும் சட்டத்தை மாநிலத்தில் தீவிரமாக அமல்படுத்தக் கோரியும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பினர்.

மணமகன் அலங்காரத்தில் குதிரையில் இளைஞர்கள் ஊர்வலமாக சென்றதை பார்த்து சோலாப்பூர் பகுதி மக்களும் ஆச்சரியப்பட்டனர். பின்னர் ஆட்சியரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை இளைஞர்கள் மனுவாக அளித்தனர். இந்தப் பேரணி சோலாப்பூரில் பேசுபொருளானது.

தேசிய குடும்ப சுகாதார சர்வேயின்படி கடந்த 2019-21 ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆண் – பெண் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 920 பெண் குழந்தைகள் என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts