வெளி நாட்டிலிருந்து வரும் பயணிகள்

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கை வரும் நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு சில கொவிட்-19 தடுப்பு தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இன்று (07) முதல் கொவிட்-19 பரவலைத் தடுப்பது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ஒரு சில கொவிட் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகள் தமக்கு கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக கட்டாயமாக PCR பரிசோதனை அறிக்கை சமர்பிக்க வேண்டிய சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றதற்கான சான்றிதழும் இன்று (07) முதல் கட்டாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், வெளிநாட்டுப் பிரஜைகள் அல்லது சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்தபின் அவர்களுக்கு கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்படுமாயின், அவர்கள் தனியார் மருத்துவமனை அல்லது ஹோட்டல் அல்லது தங்குமிடத்தில் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்பதோடு, அவர்களுக்கான சிகிச்சை அல்லது தனிமைப்படுத்துதலுக்கான செலவை அவரே (வெளிநாட்டு பிரஜை அல்லது சுற்றுலாப் பயணி) ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts