எதிரிகளை வீழ்த்த காசியை கையிலெடுத்த இளையராஜா..

உ.பி.யின் காசி விஸ்வநாதர் கோயிலில் முதல் இசை நிகழ்ச்சியாக, இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சி டிசம்பர் 15-ல் நடைபெற உள்ளது. ‘இந்து தமிழ்’ செய்தியின் தாக்கமாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் செல்கின்றனர். இதை போற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி விருப்பப்படி அங்கு, ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி கடந்த 19-ம் தேதி தொடங்கி வைத்தபோது அதில் இசைஞானி இளையராஜாவும் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது சிறப்பு இசை நிகழ்ச்சியும் அதில் நடைபெற்றது.

அதேசமயம், காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் நான்கு நிர்வாக உறுப்பினர்களில் முதல் தமிழராக வெங்கட்ரமண கனபாடி தேர்வு செய்யப்பட்டார். இந்த செய்தி ‘இந்து தமிழ்’ நாளிதழில் நவம்பர் 24-ல் வெளியானது. அப்போது அவரிடம், “கோயிலில் தமிழர்கள் இசைத்து பாட வாய்ப்புள்ளதா?” எனக் கேட்கப்பட்டதற்கு, ‘அதுவே தனது விருப்பம்’ என்றார்.

இதைப் படித்தவர்கள் காசி விஸ்வநாதர் கோயிலில் இளையராஜா இசைக்க வேண்டும் என அதன் அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தி இசை நிகழ்ச்சி நடத்த அறக்கட்டளை சார்பில் நேற்று முன்தினம் இளையராஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை உடனடியாக ஏற்றுக்கொண்ட இளையராஜா, டிசம்பர் 15-ல் பக்தி இசைக் கச்சேரி நடத்த உள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் இளையராஜா கூறியதாவது:

அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் இசை நிகழ்ச்சி நடத்த எனக்கு கிடைத்த அழைப்பால் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். கணக்கிட முடியாத நூற்றாண்டுகளாக இந்த கோயிலை நாடு முழுவதிலுமிருந்து பொதுமக்கள் வந்து வழிபடுகிறார்கள்.

விஸ்வநாதர் ஆசிபெற்று, புனித கங்கையில் மூழ்கி புண்ணியம் அடைபவர்களும் ஏராளம். அதேபோல், புத்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், கபீர்தாசர் என எத்தனையோ மகான்களும், சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் வந்து தரிசித்த இடம் இந்த காசி.

கோயில் வளாகத்தில் இதுவரை நடைபெறாத இசை நிகழ்ச்சியை நடத்தும் முதல் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதை அந்த சிவபெருமானே அருளியது போல் உணர்கிறேன். எனது இசையை கேட்க சிவபெருமான் என்னை அழைப்பது போல் உணர்கிறேன். காசி மக்களும் எனது இசையை கேட்க உள்ளார்கள் என்பது என்னுள் பரவசத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் நானே இசையமைத்த பக்திப் பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் வந்த பக்திப் பாடல்களை பாடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் வாரணாசி மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் கூறும்போது, “கோயில் புதுப்பிக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்தபோதும் இதுவரை எந்த இசை நிகழ்ச்சியும் நடைபெற்றதில்லை. இதில் முதல் நிகழ்ச்சியாக தமிழரான இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக கோயில் நிர்வாகத்திடம் இளையராஜா எந்தக் கட்டணமும் பெறவில்லை. வழக்கம்போல் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் இசையை ரசிக்கலாம்” என்றார்.

Related posts