அதிகார பரவலாக்கலுக்கு நாம் என்றுமே தயார்

இனப்பிரச்சினை தீர்வுக்கு, 13ஆவது திருத்தச் சட்டத்தினூடாக அதிகாரப்பரவலாக்கம் வழங்க என்றும் தயராகவே உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில்,

உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துஉரையாற்றிய அவர், “பொதுத் தேர்தலுக்குச் செல்லப் போவதில்லை என ஜனாதிபதி கூறினார்.

தேசியப் பட்டியலூடாக பாராளுமன்றத்துக்கு வந்த இவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினால்தான் ஜனாதிபதியானார்.

ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளால் ஜனாதிபதியானவர் மக்களால் விரட்டியடிக்கப்பட்டார். இவ்வாறுதான் அக்கட்சியின் பிரதமரும் விரட்டப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்தப்போவதில்லை என்று கூறியவுடன், இங்கே சிலர் கரகோஷம் எழுப்பினர். இவர்கள், இன்னும் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள்.

இவர்கள், கோட்டாபய ராஜபக்க்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷவுக்கு என்ன நடந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.

மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்காவிட்டால், எவ்வளவு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இவர்கள் சிந்திக்க வேண்டும்.

எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்தை மாற்றியமைத்து, உடனடியாக பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். 220 இலட்சம் மக்களும் இதனைத்தான் எதிர்ப்பார்க்கின்றனர். இதுதான் ஜனநாயகமாகும்.

ஜனாதிபதியாக இன்று ஆசனத்தில் இவர்,அமர்வதற்கு மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம்தான் காரணமாகும். எனவே, அவர் இந்த மக்களின் ஆணைக்கு செவிசாய்க்க வேண்டும்.

பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட அமைதிப் போராட்டம், எவ்வாறு வன்முறையாக மாறியது? அலரிமாளிகையில் கூடிய தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்துதான் வன்முறை வெடித்தது.

மாலையில் வெடித்த வன்முறை பிழையென்றால், காலையில் இடம்பெற்ற வன்முறையும் பிழைதான்.

இதனால், நாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக்கூட இழந்துள்ளோம். இவை பயங்கரவாதச் செயற்பாடுகளாகும்.

எனவே, இந்த இரண்டு தரப்பினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைதியான மக்கள் போராட்டத்துக்கு இந்நாட்டில் இடமுள்ளது. இதற்கு நாம் தலைமை தாங்குவோம்.

ஆனால், எவரேனும் ஒரு தரப்பினர் வன்முறைகளில் ஈடுபட்டால் அதற்கெதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சட்ட நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும்.

இந்நாட்டில் பொருளாதாரக் குற்றங்களைப் புரிந்த அந்தக் குடும்பத்துக்கு எதிராக, மக்கள் கிளர்ந்தெழுவதை யாராலும் தடுக்க முடியாது. இது அவர்களின் ஜனநாயக உரிமையாகும்.

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக ஜனாதிபதி கேள்வி கேட்டார். மொட்டுக் கட்சியினர்தான் வெளிநாட்டுக்குச் சென்றால் 13 பிளஸ் என்றும், உள்நாட்டில் 13 மைனஸ் என்றும் கூறிவருகின்றனர். நாம் 13ஆவது திருத்தச்சட்டத்தினூடாக அதிகாரப் பரவலாக்கலுக்கு என்றும் தயராகவே உள்ளோம்.

வரவு- செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் பின்னர், இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், அதிகாரப் பரவலாக்கலுக்கு நாம் தயார்.

ஆனால், ஜனாதிபதி கூறியதைப் போன்று 75 ஆவது சுதந்திரத் தினத்திற்கு முன்னர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts