அரசியல்வாதிகள் விரும்பினாலும் சில அதிகாரிகளுக்கு

மக்கள் கோரும் முறைமை மாற்றத்திற்கு (சிஸ்டம் சேஞ்ச்) அரசியல்வாதிகள் ஒத்துழைத்தாலும் ஒரு சில அரச அதிகாரிகளுக்கு அதில் விருப்பம் இல்லாமையால் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.

அரச இயந்திரத்தை நாட்டுக்கு சாதகமாக கொண்டு போக வேண்டிய பொறுப்பை சில அரச அதிகாரிகள் புறக்கணித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நிர்மாணத்துறையில் திறமையான தொழிலாளர்களை பதிவு செய்யும் வேலைத்திட்டத்தை 5 வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பது பற்றி நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மீது, அமைச்சர் இவ்வாறு குற்றம் சாட்டினார்.

“அமைச்சின் கோப்பு ஒன்று தேவைப்பட்டால் செயலாளர் வழியாக அமைச்சரை வந்து சேர பல மாதங்கள் ஆகின்றன. அது தான் உண்மையான நிலை. அரச நிறுவனங்களில் திறைசேரி அதிகாரிகள் உள்ளனர். அந்த அதிகாரிகள் சரியாக வேலை செய்தால், நிறுவனங்கள் வீழ்ச்சியடையாது,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை (10) நிர்மாணத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நிர்மாணத் தொழிலாளர்களைப் பதிவுசெய்தல் மற்றும் தொழிலாளர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு 07, சவ்சிறிபாயவில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (CIDA) இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களைப் பதிவு செய்வது தொடர்பான இணையத்தளமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஒப்பந்தக்காரர்கள், சொத்து அபிவிருத்தியாளர்கள் (Property Developers), கட்டுமானப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் விநியோகஸ்தர்கள், திறமையான தொழிலாளர்கள் உள்ளிட்ட கட்டுமானத் துறையில் உள்ளவர்களைப் பதிவு செய்யும் பொறுப்பை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்திற்கு அமைய, இந்தத் திட்டமானது, திறமையான கட்டுமானத் தொழிலாளர்களின் அறிவு, திறன்கள் மற்றும் மனோபாவங்களைச் சோதித்து பதிவுசெய்து, கைவினைஞர் அடையாள அட்டைகளை வழங்கவும், அவர்களின் தகவல்களின் தரவுத்தளத்தை பராமரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டுமானத் துறையில் தேவைப்படும் கட்டுமானத் தொழிலாளர்களை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

பதிவு செய்யப்படும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆரம்ப கட்டமாக 25 துறைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ‘பிரதான கட்டுமானத் தொழிலாளர்கள்’ மற்றும் ‘கட்டுமானத் தொழிலாளர்கள்’ என 2 வகைகளின் கீழ் தொழில்நுட்ப அடையாள அட்டைகள் வழங்கப்படும். ‘பிரதான கட்டுமானத் தொழிலாளர்கள்’ பிரிவில் அடையாள அட்டை வழங்கும் போது NVQ – நிலை 4 மற்றும் ஒரு வருட அனுபவம் அவசியமாகும். ‘கட்டுமானத் தொழிலாளர்கள்’ பிரிவில் அடையாள அட்டை வழங்கும் போது NVQ – நிலை 3 மற்றும் 6 மாத அனுபவம் அவசியமாகும்.

திறமையான தொழிலாளராகப் பதிவுசெய்த பின்னர் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப அவர்கள பலப்படுத்தப்படுவதன் காரணமாக அவர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. அத்துடன், மிகத் பலன் மிக்க மற்றும் தரம் மிக்க திறமையான பணியாளர் படையின் ஒரு பகுதியாக மாறுவதற்கான வாய்ப்பு மற்றும் தொழில்முறை ரீதியான தரத்தை மேம்படுத்துவதற்கும் இத்திட்டத்தின் மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது.

அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல்வாதிகளாகிய நாம் அரச நிறுவனங்களில் அரசியல் தலையீடுகளைச் செய்வதில்லை. உண்மையான போராட்டக்காரர்கள் சிஸ்டம் சேஞ்ச் (அமைப்பு மாற்றத்தை) விரும்பினர். அமைப்பை மாற்ற நாமும் தயார். கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நிலை காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கினர். பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சில நாட்களில் இந்த உண்மையான போராட்டம் அரசியல் நலனுக்காக அபகரிக்கப்பட்டது. அதை அபகரித்து ஆட்சி மாற்றத்திற்கு வழிவகை செய்ய முயன்றனர். வாக்களித்து ஆட்சிக்கு வர முடியாதவர்கள் போராட்டம் என்ற போர்வையில் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தனர். இந்த நிலையை மக்கள் இன்று புரிந்து கொண்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டு கட்டுமானத் துறையில் திறமையான தொழிலாளர்களுக்கான பதிவுத் திட்டத்தை நிர்மாணக் கைதொழில் அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் அந்த திட்டத்தை செயல்படுத்த 5 ஆண்டுகள் சென்றன. அதிகாரிகள் தங்கள் பொறுப்பை அலட்சியப்படுத்தியதால் தாமதம் ஏற்பட்டது. அதற்காக நான் வருந்துகிறேன். எனவே, இந்த முறைமை மாற்றத்திற்கு அரசு அதிகாரிகள் இன்னும் தயாராகவில்லை என்று கூறுகிறேன். இந்த முறையை மாற்றுவதற்கான எமது முயற்சிகளை சில அரச அதிகாரிகளும் விமர்சிக்கின்றனர்; தடுக்கின்றனர்.

படித்தவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று பலர் கூறுகின்றனர். பாராளுமன்றத்தில் படித்த, புத்திசாலித்தனமான சட்டத்தரணிகள், மருத்துவர்கள், வர்த்தர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்திலும் படித்த மற்றும் அறிவார்ந்த அதிகாரிகள் உள்ளனர். இந்நிறுவனத்தை நாட்டுக்கு வேலை செய்யும் நிறுவனமாக பேணுவது தலைவர் உட்பட அனைவரின் பொறுப்பாகும். இல்லையெனில், நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்துவிடும். இந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உலக அளவில் சிறந்த கேள்வி உள்ளது. உலகின் போக்குகளுக்கு ஏற்றவாறு கட்டுமானத் தொழிலாளர்களை உருவாக்குவது இந்த நிறுவனத்தின் பொறுப்பாகும்” என்றும் அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெனாண்டோ மற்றும் தேனுக விதானகமகே, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க, மேலதிக செயலாளர் அனில் விஜேசிறி, நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சொஹான் விஜேசேகர, நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related posts