இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய ஜனாதிபதி, இனப்பிரச்சினை தீர்வு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்தல், காணாமல் போனோர் விடயம் என்பன தொடர்பாக தீர்வு காணப்படுவது அவசியம் என குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிலர் அண்மையில் விடுவிக்கப்பட்டார்கள், எதிர்காலத்திலும் எஞ்சியவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, எகிப்தில் இடம்பெற்ற COP 27 வது காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தொடர்பாகவும், ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் வளர்ந்த நாடுகளிடமிருந்து வளர்முக நாடுகள் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை, இது அந்த மாநாட்டில் பின்னடைவாகவே கருதப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த மாநாட்டில் காலநிலை தொடர்பான எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், எகிப்து மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக தாம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கைக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் டிசம்பர் அளவில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts