மேலும் 4 அமைச்சுக்களை பொறுப்பேற்க ஜனாதிபதி தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 04 அமைச்சுப் பதவிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க தீர்மானித்துள்ளார்.

அரசியலமைப்பின் 44/3 பிரிவின்படி, பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன ஜனாதிபதியின் பொறுப்பில் வைக்கப்பட உள்ளன.

இந்த 04 அமைச்சுகளுக்கு மேலதிகமாக பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

——

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) அங்கத்துவம் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஏதுவாக சேவைத் துறையை படிப்படியாக தாராளமயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேசிய வர்த்தக கலந்துரையாடல் குழுவின் பிரதிநிதிகளுக்குமிடையில் கடந்த 04 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சுதந்திர வர்த்தகம், சர்வதேச வர்த்தகத்தின் எதிர்கால தோற்றம் மற்றும் அதற்கு ஏற்றாற்போல கொள்கைகளை மாற்றியமைப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு நீண்ட நேரம் விளக்கமளித்தார்.

மேலும், விரிவடைந்து வரும் சர்வதேச வர்த்தகச் செயற்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் இதனால் ஏற்படக்கூடிய போட்டித் தன்மைக் காரணமாக உள்நாட்டு தொழில் துறைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கும் ஏதுவாக அரசாங்கம் வர்த்தக நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமென்றும் அவர் தெரிவித்தார்.

பிராந்திய மற்றும் உலக மட்டத்திலான விநியோகச் சங்கிலியை அணுகுதல், உலகப் பொருளாதாரத்துடன் மீள இணைதல் என்பன நாட்டின் பொருளாதாரத்தை மீள புதுப்பிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படை மூலங்களாகும். இதற்கமைய அரசாங்கம் அமெரிக்கா, ஜரோப்பா போன்ற பிரதான ஏற்றுமதிச் சந்தையில் பிரவேசித்து வருகின்றபோதும் தனது ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் பாரிய மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை இலக்கு வைத்து விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் முயற்சியிலும் களமிறங்கியுள்ளது.

இந்நோக்கத்திற்காக தேசிய வர்த்தக கலந்துரையாடல் குழுவை (NTNC) நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பாரியளவிலான நேரடி முதலீடுகள் மற்றும் சிறந்த ஏற்றுமதி நிலவுகின்ற நாடுகளான இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதே இக்குழுவின் பிரதான இலக்காகும். இதன் மூலம் பொருளாதார நெருக்கடியால் உள்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில் துறைகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் ஆரம்ப மூலப்பொருட்கள், இடைநிலைப் பொருட்கள் மற்றும் மூலதனங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வர்த்தக, வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , வெளிவிவகார அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம், திறைசேரி ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts