பொய்களைப் பரப்பவே ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்

பொய்களைப் பரப்புவதற்காகவே எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் பேசும்போது, “இப்போது நாம் அனைவரும் எதைப் பற்றி கவலைப்படுகிறோம் என்றால், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி இருப்பதை பற்றிதான். ட்விட்டர் மூலம் பொய்களைப் பரப்பவே அவர் அதனை வாங்கியுள்ளார். ட்விட்டருக்கான எடிட்டர்கள் இனி அமெரிக்காவில் இருக்கப்போவது இல்லை. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதை எப்படி புரிந்துகொள்ள முடியும்” என்றார்.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், “ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பயனர்கள் பரப்ப முடியும். வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தவறான தகவல்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க அதிபர் பைடன் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்” என்று கூறினார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் இறுதியில் சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இருந்தார். எனினும், இரு தரப்புக்குமான டீல் இழுபறியாக இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் வரை பஞ்சாயத்து சென்ற நிலையில், ஒருவழியாக ட்விட்டர் உரிமை எலான் மஸ்க்கிடம் வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அந்நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டரில் மிகப் பெரிய அளவில் லே ஆஃப் எனப்படும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts