ரிஷி சுனக் வெற்றி குறித்து இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கருத்து

“நாங்கள் அவர் குறித்து பெருமைப்படுகிறோம் மேலும் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறோம்” என்று பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் மாமனாரும், இன்ஃபோதிஸ் இணைநிறுவனருமான நாராயணன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், இந்திய பில்லினியருமான நாராயண மூர்த்தி, தனது மருமகன் ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமராக தேர்வானத்தைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாராயணமூர்த்தி, “ரிஷிக்கு வாழ்த்துக்கள். நாங்கள் அவர் குறித்து மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம். இங்கிலாந்து மக்களுக்கு அவர் தன்னாலான அனைத்து நன்மைகளையும் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் கிளர்ச்சியைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததிலிலிருந்தே பிரிட்டன் அரசியல் களம் பரபரப்பு மிகுந்ததாகவே இருந்து வந்தது. அதன்பின்னர் நடந்த பிரிட்டன் பிரதமர் தேர்தலில் லிஸ் ட்ரஸ் பிரதமராக தேர்தெடுக்கப்பட்டார்.

ரிஷி சுனக்கின் குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் பிறந்த ரிஷி பிறப்பிலேயே இங்கிலாந்து குடிமகனானார். ரிஷியின் தந்தை மருத்துவராகவும், அவரின் தாய் மருந்துக்கடை ஒன்றையும் நடத்திவந்தனர்.

ரிஷி சுனக் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார். அடுத்ததாக அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தார். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற சக மாணவியும், இந்தியாவின் புகழ்பெற்ற பிசினஸ்மேன் ‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தியின் மகளுமாகிய அக்‌ஷதா மீது காதல் வயப்பட்டு இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் பெங்களூருவில் 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். குடும்பத்துடன் அதிக பிணைப்பை கொண்ட ரிஷி, தனது மாமியார் மாமனார் மீது அதிக பாசம் கொண்டிருக்கிறார். பலமுறை மேடைகளில் நாராயணமூர்த்தியை நினைத்து நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறேன் என்றும் ரிஷி கூறியுள்ளார்.

Related posts