பொதுவான பண்டிகை’ – பேராசிரியர் சாலமன் பாப்பையா

பொதுவான பண்டிகை’ என பேராசிரியர் சாலமன் பாப்பையா தீபாவளி பண்டிகை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நான் கிறிஸ்தவ வீட்டுப்பிள்ளை. எனது தாயாருக்கு கிறிஸ்துவத்தின் மீது நாட்டம் அதிகம். சிறுவயதில் தீபாவளி பண்டிகையின் போது அக்கம்பக்கத்தினர் என்னை அழைத்து பலகாரங்கள் கொடுத்து அனுப்புவார்கள்.
ஆனால் அவற்றை வாங்கி வந்தால் என் தாயார் ஏற்றுக்கொள்ளமாட்டார். பலகாரங்களை வாங்கிவந்ததால் என் தாயாரிடம் அடிவாங்கியுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் பலகாரங்கள்தானே வாங்கினோம்.
எதற்காக நம்மை திட்டுகிறார்கள் என்றெல்லாம் யோசிப்பேன். அதுசம்பந்தமாக என் தாயிடம் எதுவும் கேட்டுக்கொண்டதில்லை. சின்னஞ்சிறு வயதில் தீபாவளி என்பது எங்கள் வீட்டிற்குள் இருந்ததில்லை.
எங்கள் பெரியம்மா போன்ற சில உறவினர்கள் பணவசதி படைத்தவர்கள். அவர்கள் தீபாவளியன்று பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடுவார்கள். அப்போதெல்லாம் பட்டாசு வாங்குவதற்கு கூட என்னிடம் காசு இருந்ததில்லை. அதனால் என்னால் வெடிவெடிக்க இயலாது. ஆனால் பட்டாசு வெடிக்கும் இடங்களுக்கு சென்று வேடிக்கை மட்டும் பார்ப்பேன்.
அந்த சமயத்தில் தீபாவளியை எதற்காக கொண்டாடுகிறார்கள்? யார் கொண்டாடுகிறார்கள்? என்றெல்லாம் எனக்கு தெரியாது.
மகிழ்ச்சியான பண்டிகை என்பது மட்டுமே மனதில் தோன்றும். எல்லா மதங்களிலும் பண்டிகைகள் உள்ளன. அதேபோல இதுவும் ஒன்று என பின்னாளில் தெரிந்து கொண்டேன்.
நானும் பட்டாசு வெடிக்க தொடங்கினேன். தீபாவளி என்பது இருள் மறைந்து, ஒளி பெருகுவதை குறிப்பதாகும். இது எல்லா சமயத்தவர்களுக்கும், மதத்தவர்களுக்கும் பொருந்தும்.
வீட்டை சுற்றிலும் வெளிச்சம் இருப்பது நமக்கு நன்மைதானே. தற்போது தீபாவளியை கொண்டாடுவதில் எந்த பேதமும் யாரும் பார்ப்பதில்லை. யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம்.
அடிப்படையில் தீமை மறைந்து, நன்மை பெருகுகிறது என்பதை நமக்கு இந்த பண்டிகை உணர்த்துகிறது. படித்து நான் வேலைக்கு சென்றபின்பும் எனக்கு பல்வேறு பொறுப்புகள் இருந்தன.
ஆனாலும் எங்கள் வீட்டில் பட்டாசு கொளுத்தி தீபாவளியை கொண்டாடியுள்ளோம். தற்போது வரை எனது பேரன், பேத்திகளுக்கு பட்டாசு வாங்கி கொடுத்து தீபாவளியை கொண்டாடுகிறோம்.
இளமை காலத்தில் தீபாவளி பண்டிகையின்போது நண்பர்கள், உறவினர்கள் பட்டாசு, இனிப்பு வழங்குவார்கள். ராமமூர்த்தி என்ற நண்பருடன் பல ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருக்கிறேன். இந்தியாவில் இருக்கும் மக்கள் எல்லோரும் கொண்டாடும் ஒரு பொதுவான பண்டிகையாக தீபாவளி மாறி உள்ளது.

Related posts