பொன்னியின் செல்வனுக்காக தினமும் 3 மணி

இந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரவிவர்மன். இந்தி சினிமாவில் கொண்டாடப்படும் டெக்னீஷியன்! இவர்தான், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை கேமராவுக்குள் அடக்கியவர். அடுத்த படம் தொடர்பான வேலையில் பரபரப்பாக இருந்தவரைச் சந்தித்தோம்.

‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னத்தோட பல வருட கனவு…எப்படி தயாரானீங்க?
கண்டிப்பா, அவரோட கனவு படம்தான். எல்லா படங்களுக்கும் எப்படி என்னைத் தயார்படுத்துவேனோ, அப்படித்தான் இதுக்கும் தயாரானேன். ஏன்னா, ஒவ்வொரு பிரேமும் எனக்கு முக்கியம். அது வரலாற்றுப் படமா இருந்ததால இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தோம். அதோட நானும் சோழர்கள் ஆண்ட தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவன் அப்படிங்கறதால, இந்தப் படத்து மேல அதிக அன்பு இருந்தது.

கரோனா காலத்துல ஷூட்டிங். கஷ்டமா இருந்திருக்குமே?
கஷ்டம்தான். ஆனா, எந்த தடங்கலும் இல்லாம ஷூட் பண்ண முடிஞ்சது. எந்த வேலையிலும் முழு மனசா ஈடுபட ஆரம்பிச்சா, அதை அதுவா இழுத்துட்டுப் போகும்னு சொல்வாங்க. அப்படித்தான் நடந்தது. எல்லோருமே நூறு சதவிகிதஉழைப்பைக் கொடுத்தாங்க. அதனாலதான் குறிப்பிட்ட காலத்துக்குள்ள முடிக்க முடிஞ்சது. இதுல நடிச்சவங்க எல்லோரும் திறமையான நடிகர்கள். ஒவ்வொருத்தரும் அந்தந்த கேரக்டராகவே மாறி நடிச்சாங்க. திறமையானவங்க ஒன்னு சேரும்போது, அதுல பிரச்னை வர வாய்ப்பே இல்லை.

படத்துல போர்க்காட்சிகள் அதிகமாகப் பேசப்படுது. எப்படி காட்சிப்படுத்துனீங்க?
ஒரு போர்க்களத்துல, சண்டை நடக்கும்போது ஒருத்தன் மாட்டினா, அவன் பார்வையில அந்தக் காட்சி எப்படி இருக்கும்னு யோசிச்சு, ஷூட் பண்ணினோம். அதாவது, போர்க்களத்துல மாட்டினவனா, அந்த கேமராவை நினைச்சுக்குங்க. அப்படித்தான் எடுத்தோம். கேமராவை தோள்ல தூக்கிட்டுசண்டை நடக்கிற இடத்துக்குள்ள நின்னு காட்சிப்படுத்தினோம். அது சரியா வந்திருக்குன்னு நினைக்கிறேன்.

ஆதித்த கரிகாலன் ஒரு கோட்டை மேல நின்று பார்க்கிற காட்சி, வித்தியாசமா இருந்ததுன்னு சொல்றாங்க. எப்படி எடுத்தீங்க?
குவாலியர் கோட்டையில எடுத்தக் காட்சியை சொல்றீங்கன்னு நினைக்கிறேன். அது ட்ரோன் ஷாட், இருந்தாலும் அதுக்கு நிறைய பிராக்டீஸ் பண்ணினோம். படத்தில் நீங்கள் பார்க்கிற எல்லா காட்சிகளையும் குறைந்த நேரத்துல நிறைய ஹோம் ஒர்க் பண்ணி எடுத்தோம். அதனாலதான் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமா வந்திருக்குன்னு நினைக்கிறேன்.

ஐஸ்வர்யா ராய், த்ரிஷா சந்திக்கும் காட்சி அவ்வளவு அழகா இருக்குன்னு விமர்சகர்கள் பாராட்டி இருக்காங்களே?
ஐஸ்வர்யா ராய், த்ரிஷா அழகுங்கறது எல்லாருக்குமே தெரியும். அவங்களை இன்னும் அழகா காட்டறதுக்கு என்னபண்ண முடியுமோ, அதை பண்ணினோம். ரிலீஸூக்கு முன்னால, படம் பார்த்துட்டு ஐஸ்வர்யா ராய் போன் பண்ணினாங்க.20 நிமிஷம் பேசிருப்பாங்க. நான் கேட்டுக்கிட்டே இருந்தேன். அவங்க குரலை கேட்டதே ஆனந்தமா இருந்தது.

வேற யார்லாம் பாராட்டினாங்க?
கமல்ஹாசன். அவர்கிட்ட பாராட்டு வாங்குறது பெரிய விஷயம். இந்திய சினிமாவுல பல டெக்னாலஜி விஷயங்கள் வந்திருக்குன்னா, அதுக்கு கமல் சார் காரணமா இருந்திருக்கார். நடமாடும் பல்கலைக்கழகம்னு அவரை சொல்லலாம். அவர் பாராட்டை பெருசா மதிக்கிறேன்.

இந்தப் படத்துல சவாலான விஷயமா நீங்க எதைச் சொல்லுவீங்க?
குறிப்பிட்டு இதுதான்னு சொல்ல முடியாது. ஆனா, ஒவ்வொரு ஃபிரேமும் எனக்கு சவால்தான். ‘அப்பாடா, இன்னைக்கு ஷூட்டிங் முடிஞ்சிருச்சு,போய் தூங்கலாம்’னா, முடியாது. அந்த மொத்த ஷூட்டிங்லயும் நான் தினமும் தூங்கினது வெறும் 3 மணிநேரம் மட்டும்தான். ஏன்னா, மறுநாள் காலைல டைரக்டர் வரதுக்குள்ள லைட்டிங்ல இருந்து எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கணும். அவ்வளவு உழைப்பை வாங்கிய படம் இது.
அடுத்து என்ன படம்?
நடிகை ரேவதி இயக்கத்துல கஜோல் நடிச்சிருக்கிற, ‘சலாம் வெங்கி’ங்கற இந்திப் படம் பண்ணியிருக்கேன். இப்ப ‘இந்தியன் 2’ படத்துக்கு ஒளிப்பதிவு பண்றேன்.

Related posts