ரூ.50 கோடியை எட்டாத பாலிவுட் ‘விக்ரம் வேதா’

பாலிவுட்டில் வெளியாகியுள்ள ‘விக்ரம் வேதா’ திரைப்படம் 5 நாட்களில் ரூ.48.75 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’. படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இப்படத்தை ‘விக்ரம் வேதா’ பெயருடன் இந்தியில் இயக்கியது படக்குழு.

இதில், மாதவன் கதாபாத்திரத்தில் சயீஃப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இதனால், பாலிவுட்டில் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இப்படம் செப்டம்பர் 30-ல் திரையரங்குகளில் வெளியானது. வட மாநிலங்களில் படத்திற்கான வரவேற்பு எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் படம் பொறுமையாக பிக் அப் ஆகி வருகிறது. அதன்படி, படம் முதல் நாளில் ரூ.10.58 கோடியையும், இரண்டாவது நாளில் 12.51 கோடியையும், மூன்றாவது நாளில் ரூ.13.85 கோடியையும் வசூலித்து மூன்று நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ.36.94 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 4-வது நாள் ரூ.7 கோடியையும், 5 நாளான நேற்று ரூ.5.75 கோடியை வசூலித்து மொத்தம் இதுவரை 48.75 கோடியை படம் வசூலித்துள்ளது. 5 நாட்களில் ரூ.50 கோடியை நெருங்க தடுமாறும் படம், இந்த வார இறுதியில் ரூ.60 கோடி வரை வசூலை ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. படத்தின் மீதான விமர்சனங்கள் நேர்மறையாக இருந்த போதிலும், வசூலில் அது பிரதிபலிக்கவில்லை. உலகம் முழுவதும் 5640 திரைகளில் வெளியான இப்படத்தின் பட்ஜெட் ரூ.175 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts