தேசிய பேரவையிலிருந்து ஜீவன் தொண்டமான் விலகல்

அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து இ.தொ. காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் எம். பி வெளியேறியுள்ள நிலையில் அதற்கு பதிலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி பொறுப்பாளரும் எம்.பி.யுமான மருதபாண்டி ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி உட்பட நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கத்தினால் அண்மையில் தேசிய சபை உருவாக்கப்பட்டதுடன் அந்த சபையின் தலைவராக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன செயற்பட்டு வருகின்றார். பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது. வழமையான பணிகளையடுத்து சபாநாயகர் அறிவிப்பின்போதே சபாநாயகர் இதனை சபையில் அறிவித்தார்.

அது தொடர்பில் சபாநாயகர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய சபையிலிருந்து ஜீவன் தொண்டமான் எம்.பி. விலகியுள்ளார். அவரது வெளியேற்றத்தினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு மருத பாண்டி ராமேஷ்வரன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி.யும் தேசிய சபையின் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி தேசிய சபையை உருவாக்குவது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்த நிலையில் அது ஏகமனதாக சபையில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த தேசிய சபையில் 35 க்கும் மேற்படாத எம்.பி.க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். இதில் பலர் ஏற்கனவே நியமிக்கப்பட்டு விட்ட நிலையிலேயே தற்போது புதிதாக சம்பிக்க ரணவக்க எம். பி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

—–

உலகையும் மனிதகுலத்தையும் வழிநடத்தும் வழிகாட்டியாக ஆசிரியர் தொழில் காணப்படுவதனால் இது உலகின் மேன்மையான தொழில்களுள் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சர்வதேச ஆசிரியர் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஆசிரியர் என்பவர் ஞானம் மற்றும் உள்ளம் ஆகியவற்றின் கலவையாகும். ஆசிரியப் பணி என்பது ஒரு தொழில் அல்ல. அது சேவைக்கு அப்பாற்பட்ட ஒரு பொறுப்பாகும். அதனால்தான் ஆசிரியர், சமுதாயத்தில் உயர்வாகக் கருதப்படுகிறார் . இப்படிப்பட்ட பெருமைக்குரிய பணியை ஆற்றிவரும் ஆசிரியரை போற்றும் வகையில் உலக ஆசிரியர் தினத்தை கொண்டாடுகிறோம்.

அரசாங்கம் என்ற வகையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணிக்கான எமது பொறுப்புகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம். கல்வி அமைச்சராக நான் பணியாற்றியபோது ஆசிரியர் பணியின் கௌரவத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயற்பட்டேன். அரசியல் அடிப்படையிலான ஆசிரியர் நியமனத்தை இடைநிறுத்தவும், கல்வியியல் கல்லூரி முறைமையை உருவாக்க நடவடிக்கை எடுத்ததையும் நினைவு கூறுகின்றேன்.

ஆசிரியர்களுக்கு நவீன உலகத்துடன் இணைவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் நான் அவர்களுக்கு ஆங்கில மொழியை கற்பதற்கான விசேட பயிற்சியை ஏற்பாடு செய்தேன். மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிடும் இவ்வேளையில், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள ஆசிரியர்கள், தங்களின் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் உயர்வான ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts