திமுக-விலிருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்

திமுகவிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார். திமுக மேலிடம் மீதான அதிருப்தி காரணமாக தனது துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் விருப்பத்தின் அடிப்படையில் விலகுவதாக அவர் தனது விலகல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுப்புலட்சுமி ஜெகதீசனின் விலகல் அறிக்கையில், “2009ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணிக் காலம் நிறைவு பெற்ற பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகள் மட்டுமே மேற்கொள்வது என்று எனது விருப்பத்தை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்திருந்தேன். தலைவர் கலைஞரின் மறைவுக்குப் பின்னர் அவரது விருப்பத்தின்படி தலைவர் ஸ்டாலின் அவர்களை முதல்வராக்கும் வகையில் கழகப் பணிகளை மட்டுமே மேற்கொண்டேன். 2021 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்றது.

தலைவர் தளபதி ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே போற்றும் வகையில் செய்துவருகிறார். முதல்வரின் சிறப்பான பணிகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு, அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாகவும் குறிப்பிட்டு எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையின் பின்னணி என்ன? கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜகவைச் சேர்ந்த சரஸ்வதியிடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால், அதிருப்தியடைந்த சுப்புலட்சுமி, தனது தோல்விக்கு காரணம் இவர்கள்தான் என சிலரை சுட்டிக்காட்டி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல், உட்கட்சித் தேர்தலிலும் தனது ஆதரவாளர்கள் சிலர் தோற்கடிக்கப்பட்டனர். இது போன்ற காரணங்களால் அவர் அதிருப்தியில் இருந்ததுடன், கட்சி நிகழ்ச்சிகளிலும் அதிகளவில் பங்கேற்காமல் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன், தனது முகநூல் பக்கத்தில், முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு பதிவுகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.குறிப்பாக, செப்.11-ம் தேதி சென்னையில் ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படத்தை முதல்வர் வெளியிட்டதுடன் வைகோவைப் புகழ்ந்து பேசினார். இதை விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதேபோல், 1993-ம் ஆண்டு ராணிப்பேட்டையில் கருணாநிதி சென்ற வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவத்தை குறிப்பிட்டு, அப்போது அதிமுகவில் இருந்தவர்கள் தற்போது திமுகவில் அமைச்சர்களாக இருப்பதாகவும் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தை, அமைச்சர் மூர்த்திமகன் திருமணத்துடன் ஒப்பிட்டும் விமர்சித்திருந்தார்.இதையடுத்து, சுப்புலட்சுமி மீது உள்ளூர் திமுகவினரே கட்சித் தலைமையிடம் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், அவர் தனது துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், வயது மூப்பை காரணம் காட்டி கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுகுறித்து திமுக தலைமை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. சுப்புலட்சுமியும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார். அதேநேரம், அவரது கணவர் ஜெகதீசன் வெளியிட்ட பதிவுக்கு பலரும் ஆதரவாக பதிவிட்டுள்ளதால், திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில் சுப்புலட்சுமி ஜெகதீசனின் விலகல் கடிதம் வெளியாகியுள்ளது.

Related posts