விபத்தில் இந்திய அளவில் முதலிடத்தில் தமிழகம்

சாலை விபத்துகளில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ள நிலையில், இனி ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்றும், மேலை நாடுகளில் உள்ளது போல ‘யுனிவர்சல் ஸ்மார்ட் கார்டு’ வழங்கினால் சாலை விதிமீறல்கள் ஏற்படாது என்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளில் உள்ள வாகனங்களின் மொத்த எண்ணிக்கையில் 2 சதவீதமே இந்தியாவில் உள்ளது. இருப்பினும் வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 20 முதல் 30 சதவீத வாகனங்கள் மட்டுமே முறையாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2018-ம் ஆண்டு 4 லட்சத்து 62 ஆயிரத்து 44 விபத்துகள் ஏற்பட்ட நிலையில், கடந்த 2019-ல் 4 லட்சத்து 49 ஆயிரத்து 2 சாலை விபத்துகளும், 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 138 ஆகவும் குறைந்துள்ளது.

அதேநேரம், அகில இந்திய அளவில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2018-ல் 63 ஆயிரத்து 920 பேரும், 2019-ல் 57 ஆயிரத்து 228 பேரும் விபத்தில் சிக்கியுள்ளனர். 2020-ம் ஆண்டில் தமிழகத்தில் 45,484 சாலை விபத்துகள் நடந்துள்ள நிலையில் சுமார் 8 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நாட்டிலேயே சாலை விபத்து குறைவாகநடைபெறும் மாநிலமாக புதுச்சேரி உள்ளது. புதுச்சேரியில் கடந்த 2020-ல் நிகழ்ந்த 969 சாலை விபத்துகளில் 145 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 2019 காலகட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக தமிழகத்தில் 1.08 கோடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2020-ல் 1.72 கோடியாகவும், 2021-ல் 2.05 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் பகுதிகளை 500 மீட்டர் நீளத்துக்கு ‘கருப்பு இடங்களாக’ அடையாளப்படுத்தவும், விபத்து மற்றும் உயிர்ப்பலி எண்ணிக்கையை தடுக்கவும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டி.எஸ்.பார்த்தசாரதி கூறியதாவது:
பொதுவாக சீட் பெல்ட், ஹெல்மெட், ஓட்டுநர் உரிமம் இல்லாமல், காப்பீடு இல்லாமல் வாகனங்களை இயக்குவது, சிக்னல்களை மீறிச் செல்வது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, அதிவேகமாக செல்வது போன்ற விதிமீறல்கள்தான் அதிகளவில் நடக்கின்றன.

இனி ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு காப்பீடு செய்யப்பட வேண்டும். சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டும் போதாது, உடனடி தண்டனையும் இருக்க வேண்டும். அப்போதுதான் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என்கிற பய உணர்வு வரும்.

பொறுப்புணர்வு அதிகரிக்கும் :
மேலைநாடுகளில் உள்ளதுபோல, இந்தியாவிலும் ஓட்டுநர் உரிமம், காப்பீடு, வாகனப் பதிவு, ஆதார், பான் கார்டு, வங்கி விவரங்கள், பாஸ்போர்ட் போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து ‘யுனிவர்சல் ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்பட்டால் வாகன ஓட்டிகளின் ஒட்டுமொத்த ஜாதகமும் இந்த கார்டில் உள்ள சிப் மூலமாக தெரிந்துவிடும் என்பதால் பொறுப்புணர்வு அதிகரிக்கும். சாலை விதிமீறல்களுக்கு வேலை இருக்காது.

மேலும், போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டணச் சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இ.ரவிச்சந்திரபாபு கூறியதாவது:

திருத்தியமைக்கப்பட்டுள்ள மோட்டார் வாகனச் சட்டப்படி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது சமூக சேவை. காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை. சிக்னல்களை மீறினால் ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்.

தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை. பெற்றோருக்கு. சம்பந்தப்பட்ட வாகனப் பதிவு எண் ஓராண்டுக்கு முடக்கம். 18 வயது பூர்த்தியடைந்தாலும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது என சட்டம்கடுமையாக இருந்தாலும், பொதுமக்களுக்கு சுயக் கட்டுப்பாடு மிகமுக்கியம்.

மேலை நாடுகளில் சிக்னல்களைத் தாண்டி செல்லும் வாகனங்களை ஆட்டோமேட்டிக் ரோபோக்கள் அடித்து நொறுக்கி விடும். அந்தளவுக்கு இல்லை என்றாலும் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு வாகன ஓட்டிகளுக்கு வர வேண்டும். அப்போதுதான் விபத்து எண்ணிக்கை குறைந்து குடும்பமும், சமுதாயமும் சிறக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts