விக்ரம் 100-வது நாள் – கமல்ஹாசன் நன்றி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

ஏனெனில் இதில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதையடுத்து திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் முழு நீள ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. ஒரே ஒரு பாடல் மட்டுமே படத்தில் இடம்பெற்றிருந்தாலும், அனிருத்தின் பின்னனி இசை தனி கவனத்தைப் பெற்றது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் ‘விக்ரம்’ திரைப்படம் வசூலை வாரிக் குவித்தது. நடிகர் கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில், உலக அளவில் அதிக வசூலை ஈட்டிய படமாகவும் இது அமைந்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர். தற்போது ஓ.டி.டி.யில் படம் வெளியாகி சாதனை படைத்திருந்தாலும், இன்னும் கூட சில திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் 100-வது நாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 22 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த ஆடியோவில் அவர் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அந்த ஆடியோவில், “ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் நூறாவது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன்.

விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி. தம்பி லோகேஷிற்கு என் அன்பும், வாழ்த்தும்!” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related posts