ராஜபக்ஷ ஆட்சியைச் சாடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

ராஜபக்ஷ ஆட்சியின் நடவடிக்கைகளால் இலங்கை தற்போது இத்தகைய கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.தற்போதைய நெருக்கடிக்கு ராஜபக்ஷக்கள் மாத்திரமல்ல, அவர்களைச் சுற்றியுள்ள அரசாங்கப் பிரதிநிதிகள், அவர்களது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளும் தான் காரணம் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

“2005க்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்தவர்கள், நாடும் அதன் சொத்துக்களும் தமக்குச் சொந்தம் என்றும், தாங்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்றும் நினைத்தனர். தாங்கள் செய்யும் ஒவ்வொரு அழுக்கு வேலையிலிருந்தும் தப்பித்து விடலாம் என்று நினைத்தார்கள். யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் அவர்கள் கொல்லப்பட்டனர்”என்று அவர் கூறினார்.

தேசத்தின் நலனுக்காக உழைக்க விரும்புபவர்கள் கட்சி பேதமின்றி கைகோர்த்து தேசத்தை புத்துயிர் பெற புதிய முறைமையை அறிமுகப்படுத்துவதே முன்னோடியாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அலுவலகத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைக் குறிப்பிட்டார்.

நவ லங்கா சுதந்திரக் கட்சிக்கு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts