போலந்தில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல்

சமீபகாலமாக இந்தியர்கள் மீது வெளிநாடுகளில் இனவெறி தாக்குதல் நடைபெறுவது அதிகரித்துள்ளது. போலந்து நாட்டில் இந்தியர் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், தன்னை ஐரோப்பாவைச் சேர்ந்தவர், வெள்ளை இனத்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த நபர் இந்தியர் ஒருவர் இடைமறித்து சரமாரியாக வசைபாடுகிறார்.

அந்த நபரின் பேச்சில் இருந்து.. ”நீங்கள் இந்தியரா? நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் உங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லக் கூடாது. எப்போதும் நீங்கள் இந்தியர்கள் ஐரோப்பிய நாடுகளை ஏன் ஆக்கிரமித்துக் கொள்கிறீர்கள். படையெடுப்பது போல் நீங்கள் இங்கே பரவியுள்ளீர்கள். இங்கே ஒட்டுண்ணிகள் போல், இன அழிப்பாளர்கள் போல் எங்களைத் துன்புறுத்துகிறீர்கள். நீங்கள் ஏன் உங்கள் நாட்டுக்குச் சென்று உங்கள் நாட்டைக் கட்டமைக்கக் கூடாது. தெரிந்து கொள்ளுங்கள் போலந்து போலிஷ் மக்களுக்கான தேசம். நீங்கள் படையெடுக்காதீர்கள். திரும்பிச் செல்லுங்கள்” என்று அந்த நபர் மிகவும் கடுமையான சொற்களால் விமர்சிக்கிறார்.

பொறுமை காத்த இந்தியர்: இத்தனை வசவுகளுக்கும் பதிலுக்கு வசைபாடாத இந்தியர் பொறுமையாக நிலைமையைக் கையாள முயல்கிறார். நீங்கள் என்னை படம் பிடிக்காதீர்கள் என்று மட்டும் சொல்கிறார். அதற்கும் அந்த நபர் விடவில்லை. நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன் எனக்கு உங்களை படம்பிடிக்கும் உரிமை உள்ளது என்று கூறுகிறார். அந்த நபர் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தாவிட்டாலும் ஒட்டுண்ணி, இன அழிப்பாளர் போன்ற கடுமையான சொற்களால் விமர்சிக்கிறார். இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இனவெறி தாக்குதலுக்கு உள்ளான இந்தியரின் விவரம் ஏதும் வெளியாகவில்லை.

எங்கு சென்றாலும் இருக்கிறீர்கள்… சில தினங்கள் முன் அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் “அமெரிக்காவில் எங்கு சென்றாலும் நீங்கள்தான் (இந்தியர்கள்) இருக்கிறீர்கள்- இந்தியாவுக்கு திரும்ப ஓடுங்கள்” என மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண் இனவெறியுடன் பேசி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல மற்றொரு இனவெறி சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வீடியோ ஏற்படுத்திய அதிர்ச்சி விலகுவதற்குள் இன்னொரு இனவெறி தாக்குதல் வீடியோவும் வெளியானது

‘இந்துக்கள் கேவலமானவர்கள்’ அதில், இந்தியர் இனரீதியாக தாக்குதலை எதிர்கொண்டது மற்றொரு இந்திய வம்சாவளி நபரிடமிருந்து என்பது தான் சோகம். கிருஷ்ணன் ஜெயராமன் என்ற அந்த இந்தியர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஃப்ரீமாண்டில் உள்ள டகோ பெல்லில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு இந்தியரான யூனியன் சிட்டியைச் சேர்ந்த தேஜிந்தர் சிங் என்பவர் கிருஷ்ணன் ஜெயராமனை இனரீதியாக வசைபாடினார். இருவருமே தனித்தனியாக அந்த உணவகத்துக்கு உணவருந்த வந்தவர்கள்தான். ஆனால், அந்த தருணத்தில் இருவருக்குள்ளும் விவாதம் எழ, கோபமான தேஜிந்தர் சிங், “நீங்கள் கேவலமாகத் தெரிகிறீர்கள். இது இந்தியா அல்ல. இனி இதுபோன்று பொது வெளியில் வர வேண்டாம். இந்துக்களாகிய நீங்கள் அவமானம், கேவலமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று வசைபாடியதுடன் கிருஷ்ணன் ஜெயராமன் இறைச்சி சாப்பிடவில்லை என்பதை குறிப்பிட்டு மாட்டிறைச்சியை அவரின் முகத்தில் வீசி எறிந்தார்.
இந்த இரண்டு சம்பவங்களும் வெளிநாட்டில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சொல்வதாக இருந்தது. தற்போது போலந்து நாட்டில் நடந்த சம்பவம் அந்த இக்கட்டான சூழலை இன்னும் தீவிரமாக உணர்த்தியுள்ளது.

Related posts