இலங்கையை மையப்படுத்தி சர்வதேச ராஜதந்திர நகர்வு

இலங்கையை மையப்படுத்தி முக்கிய சர்வதேச ராஜதந்திர நகர்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது ஜப்பானிய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதபோதும் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி கடன் வழங்குனர்களின் மாநாட்டை நடத்துமாறு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானை கேட்டிருந்தார்.

இதற்கமையவே ஜப்பான் குறித்த மாநாட்டை கூட்ட விருப்பம் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தநிலையில், இந்த மாநாட்டை கூட்டுவதன் மூலம் ஜப்பானுக்கு இலங்கை ஏற்கனவே வழங்கவேண்டிய 3 பில்லியன் டொலர்களை மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நோக்கம் ஜப்பானுக்கு இருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த கருத்துக்கு அப்பால், பிராந்திய இருப்பு தொடர்பான கருத்தும் தற்போது வெளியாகியுள்ளது.
டோக்கியோவின் இந்த நடவடிக்கையானது, பிராந்தியத்தில் சீனாவின் இருப்பு வளர்ந்து வரும் நேரத்தில், தமது இராஜதந்திர நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே ஜப்பான் இந்த நடவடிக்கைக்கு முன்வந்துள்ளதாக ஆய்வு இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் ஜப்பான் நடத்த உத்தேசித்துள்ள இந்த மாநாட்டுக்கு சீனா ஒத்துழைக்குமா என்பதை பொறுத்தே, ஜப்பானின் இராஜதந்திர வெற்றி உறுதிப்படுத்தப்படும் என்று ஜப்பானிய ஆய்வு இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Related posts