விஜய்யின் ‘வாரிசு’ படப்பிடிப்புக்கு சிக்கல்

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பை நிறுத்தவேண்டும் என எதிர்ப்பு எழுந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அவரது விளக்கத்தால் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பைலிங்குவல் படம் ‘வாரிசு’. தமன் இசையமைக்கும் இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா உட்பட பலர் நடிக்கின்றனர்.

குடும்பக் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றார் விஜய். அங்கு படத்தின் படப்பிடிப்பு நடத்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காரணம், கதாநாயகர்களின் சம்பளம், தயாரிப்பு செலவுகள் உயர்ந்துவருவதற்கு முடிவு கட்டிய பிறகே படப்பிடிப்புகள் நடத்தப்படும் என கூறி, ஆகஸ்ட் 1 முதல் தெலுங்கு தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நிறுத்தியுள்ளனர். இந்தச் சூழலில் விஜயின் ‘வாரிசு’ தெலுங்கிலும் உருவாவதால், அந்த படத்தின் ஷூட்டிங்கையும் நிறுத்தவேண்டும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்ப்புக்கு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். அதில், ”இருமொழிகளில் வெளியாகும் ‘வாரிசு’ தெலுங்கு படம் அல்ல. அது அசல் தமிழ் படம் தான். இப்படம் தமிழில் எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் ‘வரசுடு’ (Vaarasudu) என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.

ஆனால், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து, ‘வாரிசு’ ஒரு தமிழ் படம் அல்ல. இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் திரைப்படம் என்பதால், தெலுங்கு திரைப்பட துறையின் வேலை நிறுத்தம் இந்தப் படத்திற்கும் பொருந்தும் என கூறியுள்ளனர். இருப்பினும் தில் ராஜூ ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts