காலி முகத்திடல் உடனடியாக அகற்றுமாறு அறிவித்தல்

காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் பயிர்களை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் நாளை மறுதினம் (05) மாலை 05.00 மணிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைவாகவும், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் கோட்டை பொலிஸார் மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிவுறுத்தல்களின்படி செயல்படாத நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

——

ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

——

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 28 ஆம் திகதி லங்கா வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

—–

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை இன்று (03) இரண்டாவது நாளாக பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேகா அலுவிஹாரே, விஜித் மலல்கொட, எல்டிபி தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

—-

சர்வகட்சி அரசாங்கத்தில் தாங்கள் இணைந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அத்துடன் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கூட வழங்க போதில்லை என கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையின் போது இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

நாடு தற்போது பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே அதனை முறியடிக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts