அதிகரிக்கப்பட்ட புகையிரத கட்டணம் இன்று முதல்

புகையிரத பயணச்சீட்டு கட்டணம் தற்போதுள்ள பஸ் கட்டணத்தில் அரைவாசியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, புகையிரத பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உரிய முறைமையின்றி புகையிரத கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புகையிரத பயணச்சீட்டுகளை ஏற்கனவே உள்ள அதே கட்டணத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட கட்டணங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும், கட்டண அதிகரிப்பை செயல்படுத்த முறையான வழிமுறை இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை சங்கம் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட கட்டணங்கள் குறித்து ஜூலை 31 ஆம் தேதிக்குள் சங்கம் முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், திருத்தப்பட்ட புகையிரத கட்டணம் இன்று (23) நடைமுறைக்கு வருவதாகவும், அதற்கு புறம்பாக செயற்படும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், புகையிரத பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

புகையிரத கட்டணங்களை ஜூலை 12ஆம் திகதி முதல் திருத்துவது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அண்மையில் வெளியிடப்பட்டிருந்த போதிலும் அதனை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts