மஹிந்த, பசில் உள்ளிட்டோருக்கு பயணத்தடை

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் வெளிநாடு செல்வதைத் தடை செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்றையதினம் (12) நகர்த்தல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவ இவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் ஜுலை 27ஆம் திகதி உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், குறித்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுவின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியும் எங்கு உள்ளார் என்பது தொடர்பில் தெரியாத நிலையில், ஏனைய பிரதிவாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக குறித்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரை அனுமதியின்றி வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவைவ வழங்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த ஜூன் 17ஆம் திகதி, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (Transparency International Sri Lanka -TISL), சந்திரா ஜயரத்ன, ஜெஹான் கனகரட்ன, ஜூலியன் பொலிங் ஆகியவர்களுடன் இணைந்து பொது நலன் தொடர்பான மனுவொன்றை (SC/FRA/212/2022) தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு கடந்த ஜூலை 01ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது, ​​எதிர்மனுதாரர்கள் இருவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள், இது தொடர்பில் உள்ள மற்றொரு மனுவுடன் (SCFR 195/2022) இம்மனுவை எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றத்தைக் கோரியிருந்தார். இதையடுத்து இந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு பிரதம நீதியரசரக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பரிசீலனைக்குப் பின்னர், குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா, சந்திரா ஜயரத்ன, ஜெஹான் கனகரட்ன, ஜூலியன் பொலிங் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள், இலங்கையின் வெளிநாட்டுக் கடனின் நிலைபேறற்தன்மை, வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள வங்குரோத்து நிலை மற்றும் தற்போதைய பொருளாதாரத்தின் நிலை ஆகியவற்றிற்கு நேரடியாகப் பொறுப்பானவர்கள் என கூறப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் உச்சக்கட்டத்தை அடைவதற்கு, மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகளின் சட்டவிரோதமான, தன்னிச்சையான, நியாயமற்ற செயல்கள் காரணம் எனவும், அவர்களே அவற்றிற்கு பொறுப்புக்கூற வேண்டுமெனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts