உலகில் அமைதியான நாடுகள் : டென்மார்க் 4 வது இடத்தில்

உலகில் மிகவும் அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதல் இடத்தில் உள்ளது. சர்வதேச சிந்தனைக் குழுவான இன்ஸ்டிடியூட் பார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் (வெளீயிட்டு உள்ள குளோபல் பீஸ் இன்டெக்ஸ் 2022 அறிக்கையின்படி, ஐஸ்லாந்து உலகின் மிகவும் அமைதியான நாடு.தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த அறிக்கையில் உலகின் 163 சுதந்திர நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் இடம்பெற்று உள்ளது. இந்த தரவரிசையில், இந்தியா கடந்த ஆண்டைவிட 3 ரேங்க் முன்னேறி 135வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு இதன் எண்ணிக்கை 138 ஆக இருந்தது. 2022 இல், அமைதியின் அடிப்படையில் குளோபல் பீஸ் இன்டெக்ஸ் ‘குறைந்த பிரிவில்’ வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த அமைதியில் இந்தியா 1.4 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது, உள்நாடு மற்றும் சர்வதேச மோதல்கள், சமூகபாதுகாப்பு இராணுவமயமாக்கலின் அளவு உள்ளிட்ட 23 அளவுருக்களை கொண்டு இந்த மதிப்பீடுகள் செய்யப்பட்டு இந்த குறியீடு வெளியிடப்படுகின்றன.

அதே நேரத்தில், வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் வன்முறை காரணமாக உலகப் பொருளாதாரம் ரூ.1287 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் 10.9 சதவீதம் ஆகும்.

ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் காரணமாக, ஐரோப்பா நாடுகளில் மிகவும் குழப்பமான பிராந்தியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த அறிக்கை ஐரோப்பா மிகவும் அமைதியான பிராந்தியமாக உள்ளது என்று கூறுகிறது.

ஐரோப்பாவில் உள்ள நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பாவில் மிகவும் அமைதியான 10 நாடுகளில் டென்மார்க், ஹங்கேரி மற்றும் பின்லாந்து ஆகியவையும் அடங்கும்.

ஐஸ்லாந்து கடந்த ஆண்டும் அமைதியான நாடுகளில் முதலிடத்தைப் பிடித்திருந்தது. அதே சமயம், நியூசிலாந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அமைதியான நாடாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு 8வது இடத்தில் இருந்த அயர்லாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. டென்மார்க் கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்திலும், போர்ச்சுகல் ஆறாவது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு சுலோவேனியா நான்காவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு அறிக்கையின்படி, தரவரிசையில் 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.

செக் குடியரசு எட்டாவது இடத்திலும், சிங்கப்பூர் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. அமைதியான நாடுகளின் இந்த அறிக்கையில், ஜப்பான் ஒரு இடம் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு 9வது இடத்தில் இருந்தது. இம்முறை அமைதியான நாடுகளின் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. 129 வது இடத்தில் உள்ள அமெரிக்கா உள்ளது 2008 க்குப் பிறகு அதன் மிகக் குறைந்த அமைதியான தரவரிசையைப் பதிவுசெய்து உள்ளது.

இங்கிலாந்து இரண்டு இடங்கள் முன்னேறி 34வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில், பூடான் பட்டியலில் 19 வது இடத்தைப் பெற்றுள்ளது. பூடானுக்கு அடுத்தபடியாக நேபாளம் (73), இலங்கை (90), வங்காள தேசம் (96) உள்ளன.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் 147வது இடத்தில் உள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டைப் போலவே, உலகின் குழப்பமான நாடுகளின் பட்டியலில், இந்த ஆண்டும் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் அதாவது 163 வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, குறைந்த அமைதியான நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது .

தொடர்ந்து ஏமன் 162, சிரியா 161, ரஷ்யா 160, தெற்கு சூடான் 159 ஆகிய இடங்களில் உள்ளன. அமைதியில் மிகப்பெரிய சரிவைக் கண்ட ஐந்து நாடுகளில் இரண்டு ரஷியா மற்றும் உக்ரைன் ஆகும் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு உலகளவில், குறிப்பாக தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.

உலகளாவிய அமைதியின் சராசரி நிலை 2021 -யை விட 0.3 சதவீதம் மோசமடைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

அரசியல் பயங்கரவாதம், கசப்பான இருதரப்பு உறவுகள், அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் ஆகியவற்றின் நிலைகள் 2008 இல் குறியீடு எண் தொடங்கப்பட்டதிலிருந்து மிக மோசமான நிலையில் உள்ளன.

Related posts