நடிகர் டி.ராஜேந்தர் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா

நடிகர் டி.ராஜேந்தர் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்கிறார். சென்னை, .திரைப்பட டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டி.ராஜேந்தரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து டி.ராஜேந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டி.ராஜேந்தரை உயர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து டி.ராஜேந்தரை அமெரிக்கா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்தன. விசா நடைமுறைகளும் முடிந்துள்ளன.

இதையடுத்து டி.ராஜேந்தர் சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இன்று இரவு 9.30 மணி விமானத்தில் அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார். குடும்பத்தினரும் அவருடன் செல்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் அனுமதித்து டி.ராஜேந்தருக்கு சிகிச்சைகளை தொடர்கிறார்கள்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர் கூறும்போது, “நான் எனது வாழ்வில் இந்த இடத்தில் வந்து நிற்கிறேன் என்றால் அதற்கு எல்லாம் வல்ல இறைவன் மீது வைத்துள்ள நம்பிக்கையே.

இறைவன் கொடுத்த அருளால் தற்போது பேசிக்கொண்டிருக்கிறேன். விதி, இறைவனை மீறி எதுவும் நடக்காது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts